ஓர் இனத்தின் அடையாளமாக இருப்பது மொழி. எம் தமிழ்மொழிக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த பேராசிரியர் அறிவரசன் ஐயா (மு.செ.குமாரசாமி) 04.03.2020 அன்று சாவடைந்தார் என்ற செய்தி எம்மைப் பெருந்துயரில் ஆழ்த்தியிருக்கின்றது.
பேராசிரியர் அறிவரசன் ஐயா, தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தொடக்க காலத்தில் இருந்தே மூத்த போராளிகளோடு நல்லுறவைப்பேணி எமது விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு அளித்து வந்தவர். தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் மீது அளவு கடந்த அன்பையும், நன்மதிப்பையும் கொண்டிருந்த இவர் 2006 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களின் அழைப்பை ஏற்று தமிழீழ நிதித்துறைப்பொறுப்பாளர் தமிழேந்தி அவர்களால் கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட சிறப்புத் தமிழ்மொழிப் பயிற்சிக்; கூடத்திற்கு பேராசிரியராகத் தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்திருந்தார்.
தமிழீழ விடுதலைப்போராட்டம் முனைப்புப்பெற்றிருந்த சமநேரத்தில், தூய தமிழில் அறிவாற்றல் மிக்க தலைமுறையைக் கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்டு, தமிழ் ஆசிரிய வளப்பற்றாக்குறையை நிவர்த்திசெய்வதற்காக, உயர்தரம் சித்தியடைந்த தமிழார்வம் நிறைந்த இளையவர்களை ஆசிரிய மாணவர்களாக உள்வாங்கி, அவர்களை வளமிகு தமிழாசிரியர்களாகச் செதுக்கியெடுக்கும் பெரும் பொறுப்பை இரண்டாண்டுகள் தாயகத்திலிருந்து மிகத்திறம்படச் செய்துமுடித்தார்.
இவர் எமது மண்ணில் தமிழ்பணி ஆற்றிக்கொண்டிருந்த காலப்பகுதி மிகவும் நெருக்கடி நிறைந்ததாகும். சிறிலங்கா அரச படைகளால் இனவழிப்புப்போர் முனைப்புப் பெற்று எதிரியின் எறிகணைகள், வான்குண்டுத்தாக்குதல்கள் சுற்றி எங்கும் வீழ்ந்து கொண்டிருக்க, தன் உயிரைப் பொருட்படுத்தாது உயிரிலும் மேலாய் தான் நேசித்த தமிழ்ப்பணியைச் சிறப்புற ஆற்றினார்.
அறிவுச்சோலை, செஞ்சோலைப் பிள்ளைகளுக்கு அன்போடும், உளநிறைவோடும் தமிழை ஊட்டி மகிழ்ந்ததோடு, படைத்துறை, தலைமைத்துவப் போராளிகள் மற்றும் புலிகளின் குரல், தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி எனப் பல பணியகங்களில் பணிபுரிபவர்கள்; வேற்றுமொழிச் சொற்களைத் தவிர்த்து தூய தமிழில் பேசக்கற்பித்தார்.
எமது குழந்தைகளுக்கு தூய தமிழில் பெயர்சூட்டி அழைக்க வேண்டுமென்ற தூரநோக்குச் சிந்தனைக்கமைவாக உருவாக்கப்பட்ட தமிழ்பெயர்களைக் கொண்ட நூலுருவாக்கத்திற்காக முழுமூச்சுடன் உழைத்தார். அத்தோடு புலம்பெயர் நாடுகளிலும் தாய்மொழியின் மகத்துவத்தை இளையோருக்கு விதைத்து நின்றதோடு பட்டயக்கல்வி, தமிழ் பாடநூலுருவாக்கங்கள், தமிழ் ஆசிரியர்களுக்கான பட்டறைகள் என தேமதுரத்தமிழை உலக முற்றத்தில் தனது இறுதி மூச்சு உள்ளவரை ஒலிக்கச் செய்தார்.
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் நன்மதிப்பையும், பாராட்டுதலையும் பெற்ற பேராசானின் இழப்பு இட்டு நிரப்பமுடியாதது. இவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினர், உறவினர், நண்பர்களின் பிரிவுத்துயரில் பங்கெடுத்துக் கொள்வதுடன், பேராசிரியர் அறிவரசன் அவர்கள் தமிழிற்காகவும், தமிழின விடுதலைக்காகவும் ஆற்றிய பணிக்காக, அவரைச் ‘‘செந்தழிழ்க் காவலர்’’என மதிப்பளிப்பதில் நாம் பெருமையடைகின்றோம். இன்று இவர் எம்மோடு இல்லையெனினும் இவர் விதைத்த விதைகள் நாளை பெருமரமாகி நிழல் பரப்பும். தமிழ் கூறும் நல்லுலகில் பேராசானின் பெயரும் நிலைத்து நிற்கும்.
‘‘புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்’’
அனைத்துலகத் தொடர்பகம்.
தமிழீழ விடுதலைப் புலிகள்.