கபட நோக்கத்துடன் உருவாக்கப்படும் பொதுக் கட்டமைப்பு என்னும் சதிமுயற்சிக்கு நாம் துணைபோகமாட்டோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் பிரபல சட்டத்தரணியுமான கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.
டந்த 2010 ஆம் ஆண்டு, தற்போது ஆட்சி செய்யும் தரப்பினரின் எஜமான்களான ஈ.பி.டி.பியினரின் ஆளுகைக்குள்ளேயே யாழ். மாநகரசபை இருந்தது. இலங்கையின் அரச முகவர்களின் தயவில் சபையை நிர்வகிக்கும் தரப்புக்களிடம் நினைவேந்தல்களைக் கையளிக்கும் வரலாற்றுத் தவறினை நாம் ஒருபோதும் செய்யப்போவதில்லை.
தமிழ் மக்களின் உரிமைக்காகவும், சிங்கள பௌத்த பேரினவாத ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவுமே தியாக தீபம் திலீபன் தியாகம் செய்திருந்தார். இந்த நினைவேந்தலை பேரினவாதத்துக்கு பின்னால் நின்று, அதன் முகவர்கள் குழப்ப நினைப்பதை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
தமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்துக்காகவும் ஒற்றையாட்சிக்கு எதிராகவுமே தியாக தீபம் திலீபனின் மாபெரும் தியாகம் அமைந்திருந்தது.
தியாக தீபம் திலீபனின் தியாக வரலாற்றையும் அவரின் கனவையும் சிதைக்கும் வண்ணம், அதே ஒற்றையாட்சிக்கு உட்பட்ட 13 ஆம் திருத்தத்தை ஏற்றுக்கொள்ளும் முகவர் அமைப்புக்கள் இந்த நினைவேந்தலை செய்வது, தமிழ் மக்களின் உன்னதமான தியாகம் நிறைந்த உரிமைப் போராட்டத்துக்கும் தியாக தீபம் திலீபனின் ஈடிணையற்ற தியாகத்துக்கும் செய்யும் துரோகமாகவே அமையும்.
ஆரம்பம் முதலே தியாக தீபத்தின் நினைவேந்தலை திட்டமிட்டுக் குழப்பி, எம்மீது சேறுபூசல்களைச் செய்ய முயலும் முகவர்கள் மற்றும் அமைப்புக்கள் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு என்னும் போர்வையில் தியாக தீபத்தின் நினைவேந்தலைத் தொடர்ச்சியாகக் குழப்ப முற்படுகிறார்கள்.
மேலும் கபட நோக்கத்துடன் உருவாக்கப்படும் பொதுக் கட்டமைப்பு என்னும் சதிமுயற்சிக்கு நாம் துணைபோகமாட்டோம். என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.