பொதுமக்களுக்கு ஆயுதங்களை வழங்கி தலிபான்களுக்கு எதிராக களமிறக்குகிறது ஆப்கான்!

You are currently viewing பொதுமக்களுக்கு ஆயுதங்களை வழங்கி தலிபான்களுக்கு எதிராக களமிறக்குகிறது ஆப்கான்!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் முக்கிய பல நகரங்களைக் கைப்பற்றி மிக வேகமாக முன்னேறி வரும் நிலையில் அவர்களின் முன்னேற்றத்தைத் தடுக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக ஆயுதப் படைகள் அல்லாத உள்ளூா் குழுக்களுக்கு ஆயுதங்களை வழங்க அந்நாட்டு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

ஒரு வாரத்துக்குள் தலிபான்கள் 09 மாகாணங்களில் தலைநகரங்களைக் கைப்பற்றியுள்ள நிலையில் முக்கிய நெடுஞ்சாலைகள், பெரிய நகரங்கள் மற்றும் எல்லைக் கடப்புகளைப் பாதுகாப்பதில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருவதாக ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சர் ஜெனரல் அப்துல் சத்தார் மிர்சக்வால் கூறினார்.

நாட்டில் உள்ள 130,000 பொலிஸ் படையணிக்கு பொறுப்பாக உள்ள மிர்சக்வால், தன்னார்வ போராளிகளுக்கு ஆயுதங்களை வழங்கி தலிபான்களை எதிர்த்துப் போராடுவதற்கு அரசாங்கம் அதரவளிக்கும் எனக் கூறினார்.

தலிபான்களிடம் தொடர்ச்சியாக நிலப்பரப்புக்கள் பறிபோவதைத் தடுக்க வேண்டும். முக்கிய நகரங்களைச் சுற்றி பாதுகாப்பு வளையங்களை உருவாக்க வேண்டும். இதற்கு எங்களுக்கு அதிகளவு படையணிகள் தேவைப்படுகின்றன என அவா் குறிப்பிட்டார்.

முன்னர் ஆயுதப் படைகளில் இருந்து வெளியேறிய அனைவரையும் மீண்டும் பணிக்கு கொண்டுவரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மிர்சக்வால் கூறினார்.

கடந்த மூன்று மாதங்களில் தலிபான்கள் பெருமளவு நிலப்பரப்புக்களைக் கைப்பற்றி, தங்களை கட்டுப்பாட்டுப் பகுதிகளை இரட்டிப்பாக்கியுள்ளனர். கடந்த வாரத்தில் இருந்து மாகாண தலைநகரங்களை இலக்கு வைத்து தாக்குதல்களை தொடுத்த தலிபான்கள் ஒரே வாரத்தில் 09 மாகாண தலைநகரங்களை கைப்பற்றினர்.

முக்கிய பல நெடுஞ்சாலைகள் மற்றும் அண்டை நாடுகளுடனான எல்லைகளை தலிபான்கள் கைப்பற்றியுள்ளமை ஆப்கான் அரசாங்கத்திற்கு பெரும் தோல்வியாக அமைந்துள்ளது. பல பகுதிகளில் விமானத் தாக்குதல்கள் மூலமான ஆதரவு தேவைப்படுகின்றபோதும் அமெரிக்கா தனது படைகளை மீளப் பெறத் தொடங்கியதில் இருந்து அந்தத் திறனையும் ஆப்கான் படைகள் இழந்துள்ளன.

ஆப்கானை திடீரென அப்படியே கைவிட்டு அமெரிக்கா தனது படைகளின் பாதுகாப்பை மட்டும் உறுதிப்படுத்திக்கொண்டு வெளியேறிய பின்னர் சுமார் 400 பகுதிகளில் இருந்து தலிபான்கள் சண்டைகளைத் தொடங்கியுள்ளதாக ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சர் ஜெனரல் அப்துல் சத்தார் மிர்சக்வால் கூறினார்.

எங்களிடம் மிகக் குறைந்த விமானப் படை திறனே உள்ளது. ஹெலிகப்டர்கள் முன்னணி போர்க்களங்களுக்குத் தேவையான பொருட்களை எடுத்துச் செல்வதிலும், இறந்த மற்றும் காயமடைந்த படையினரை களத்தில் இருந்து வெளியேற்றுவதிலுமே மும்முரமாக ஈடுபட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறான நிலையிலேயே தலிபான்களுக்கு எதிராக போராட உள்ளூரில் தன்னார்வலர்களுக்கு ஆயுதங்களை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது எனவும் அவா் தெரிவித்தார்.

எனினும் பாதுகாப்பு துறையில் இல்லாத பொதுமக்களுக்கு ஆயுதங்கயை வழங்குவது ஆபத்தானதாக மாறும் என சர்வதேச நாடுகள் பல கவலை வெளியிட்டுள்ளன.

எனினும் போராட முன்வரும் சிவிலியன்கள் அனைவரும் இறுதியில் ஆப்கானிஸ்தான் தேசிய பாதுகாப்புப் படைகளில் இணைக்கப்படுவார்கள் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply