உக்ரைனிய படைகளுடன் நடைபெற்று வரும் மோதலுக்கு மத்தியில் குர்ஸ்க் பிராந்தியத்தில் அமைந்துள்ள கிராமங்களை ரஷ்யா வெளியேற்றி வருகிறது. உக்ரைனிய எல்லைக்கு அருகில் அமைந்துள்ள குர்ஸ்க் பிராந்தியத்தின் சில கிராமங்களை ரஷ்யா வெளியேற்ற தொடங்கி இருப்பதாக உள்ளூர் மேயர் தகவல் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையானது, குர்ஸ்க் பகுதியில் உக்ரைனிய படைகளின் திடீர் தாக்குதல் தொடங்கிய 6 வாரங்களுக்கு பிறகு வந்துள்ளது.
இது தொடர்பாக டெலிகிராமில் ஆளுநர் அலெக்ஸி ஸ்மிர்னோவ் வழங்கிய தகவலில், உக்ரைனிய எல்லையை ஒட்டிய 15 கிலோமீட்டர் (9 மைல்கள்) தூரத்திற்குள் அமைந்துள்ள ரில்ஸ்கி(Rylsky) மற்றும் கோமுடோவ்ஸ்கி(Khomutovsky) ஆகிய பிராந்தியங்களில் உள்ள குடியிருப்புகளை வெளியேற்ற அதிகாரிகள் உத்தரவிட இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த 15 கிலோமீட்டர் சுற்றளவில் அதிக எண்ணிக்கையிலான குடியேற்றப் பகுதிகள் உள்ள நிலையில், எந்தெந்த கிராமங்கள் அல்லது குடியேற்றங்கள் வெளியேற்றப்பட உள்ளது என்பது குறித்த தகவலை அவர் வெளியிடவில்லை.
உக்ரைனிய படைகளின் முன்னேற்றத்திற்கு மத்தியிலும் ரஷ்ய படைகள் தொடர்ந்து எதிர் தாக்குதலை முன்னெடுத்து வருகின்றனர்.
கடந்த வாரங்களில் உக்ரைனிய படைகளின் கட்டுப்பாட்டுக்குள் சென்ற பல டஜன் கணக்கான குடியேற்றங்களை ரஷ்ய படைகள் வெற்றிகரமாக மீண்டும் கைப்பற்றியுள்ளனர்.
தகவல்களின் அடிப்படையில், உக்ரைன் தாக்குதலை தொடங்கிய ஆகஸ்ட் 6ம் திகதிக்கு பிறகு, சம்பந்தப்பட்ட பகுதியில் இருந்து கிட்டத்தட்ட 1,50,000 மக்களை ரஷ்யா வெளியேற்றியுள்ளது.