அமைதிப் போராட்டக்காரர்கள் மீது இலங்கை அரசாங்கத்தினால் பிரயோகிக்கப்பட்ட அடக்குமுறையானது, தற்போது நாடு முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டியதன் அவசியத்தைத் திசை திருப்பும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட தவறானதும் சட்டவிரோதமானதுமான முயற்சியாகவே தென்படுவதாகத் தெரிவித்திருக்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம், உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் நிர்வாகத்துடனேயே ஒன்றிணைந்து பணியாற்ற முடியும் என்பதில் இலங்கையின் சர்வதேசப் பங்காளிகள் மிகத்தெளிவாக இருக்க வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
அரசியல் மறுசீரமைப்பையும் நாடு முகங்கொடுத்திருக்கும் நெருக்கடி தொடர்பில் பொறுப்புக்கூறலையும் கோருகின்ற செயற்பாட்டாளர்கள் மீது அடக்குமுறைகளைப் பிரயோகிப்பதற்கும் அவர்களைத் தன்னிச்சையாகத் தடுத்து வைப்பதற்கும் இலங்கை அரசாங்கம் அவசரகால வழிகாட்டல்களைப் பயன்படுத்தி வருகின்றது.
அமைதிப் போராட்டக்காரர்கள் மீது இலங்கை அரசாங்கத்தினால் பிரயோகிக்கப்பட்ட அடக்குமுறையானது, தற்போது நாடு முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டியதன் அவசியத்தைத் திசை திருப்பும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட தவறானதும் சட்டவிரோதமானதுமான முயற்சியாகவே தென்படுகின்றது.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் இலங்கையில் ஆழமாக வேரூன்றியிருக்கும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் நிர்வாகத்துடனேயே ஒன்றிணைந்து பணியாற்ற முடியும் என்பதில் இலங்கையின் சர்வதேசப் பங்காளிகள் மிகத்தெளிவாக இருக்கவேண்டியது அவசியமாகும்.
சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் பிரகாரம் அவசரகாலநிலைப் பிரகடனம் அமுலில் இருந்தாலும்கூட சித்திரவதைகளிலிருந்தும் மிகையான படையினரைப் பிரயோகிப்பதிலிருந்தும் பாதுகாப்புப்பெறல் உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் மீறப்படமுடியாது.
எனவே சர்வதேச நியமங்களுக்கு முரணானதாக இருக்கக்கூடிய அவசரகாலநிலைப் பிரகடனத்தின் கீழான வழிகாட்டல்கள் உடனடியாக நீக்கப்பட வேண்டும்.
அதேபோன்று மிகமோசமான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கை மக்களுக்கு அவசியமான தீர்வைப் பெற்றுக்கொடுப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்பதுடன் சட்டவிரோத மீறல்கள் மற்றும் வன்முறைகளுக்குக் காரணமானவர்களைப் பொறுப்புக்கூறச் செய்வதன் ஊடாக சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்த வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.