நோர்வேயின் பிரதான அரசியல் கட்சியான “Frp” (Fremskritspartiet / முன்னேற்றக்கட்சி) யின் தலைவரான “Siv Jensen” அம்மையார், கட்சியின் தலைமை பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ள்ளது.
நோர்வேயில் வெளிநாட்டவர்களின் குடியேறுதலை தீவிரமாக விமர்சித்துவரும் இக்கட்சி, இப்போதுள்ள கூட்டரசாங்கத்தில் அங்கம் வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இக்கட்சியின் முன்னாள் தலைவரான “Carl Ivar Hagen” கட்சியின் தலைவராக இருந்த காலத்தில் அவரது தீவிர முயற்சியாலும், அவரது வாதிடும் திறமையாலும், பலத்த எதிர்ப்புக்களுக்கும் மத்தியில் மக்களிடையே அங்கீகாரம் பெறுமளவுக்கு கட்சி ஓரளவு வளர்ச்சி கண்டிருந்தது. அக்காலத்தில் கட்சியின் துணைத்தலைவராக பொறுப்பு வகித்த “Siv Jensen” அம்மையார், கட்சியின் தலைமைப்பொறுப்பை ஏற்றுக்கொண்டதிலிருந்து மேலும் வளர்ச்சி கண்ட கட்சி, மக்களிடையே மென்மேலும் பிரபலமாகி வந்ததோடு, ஆளும் கூட்டரசாங்கத்தில் அங்கம் வகித்ததோடு சில அமைச்சுக்களையும் தன்வசமாக்கியிருந்தது.

குறிப்பாக மிகமுக்கியமான நிதியமைச்சை மிகுந்த போராட்டத்தின்பின் தன்வசமாக்கிக்கொண்ட “Siv Jensen” அம்மையார், நீதியமைச்சராகவும் ஆக்கிக்கொண்டார். தனது காலத்தில் ஐரோப்பா பல பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்டு தடுமாறிய போதும், திறமையான நகர்வுகளின் மூலம், நோர்வேயின் பொருளாதாரத்தை தக்கவைத்துக்கொண்ட பெருமை இவரை சாரும்.
சிரிய போர் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில், நோர்வேயிலிருந்து இரகசியமாக சிரியா சென்று “ISIS” தீவிரவாதக்குழுவில் இணைந்து செயற்பட்டதாக அடையாளம் காணப்பட்ட, நோர்வே குடியுரிமை பெற்ற, வெளிநாட்டுப்பின்னணியை கொண்டுள்ள சில பெண்களை மீண்டும் நோர்வேக்குள் அனுமதிப்பது தொடர்பிலான விவாதங்கள் நோர்வே அரசியலில் உச்சம் பெற்றிருந்த நேரத்தில், பயங்கரவாத அமைப்போடு இணைந்து செயற்பட்டதாக கருதக்கூடிய குறித்த பெண்களை மீண்டும் நாட்டுக்குள் அனுமதிப்பது, நாட்டின் பாதுகாப்புக்கு எதிர்காலத்தில் பாதகமாக அமையுமென கருதிய “Siv Jensen” அம்மையார், தனது தீவிர எதிர்ப்பை வெளியிட்டார்.
எனினும், நோர்வே குடியுரிமை பெற்றவர்கள் மீது, நோர்வே அரசு கரிசனை கொள்ளவேண்டுமென்ற அடிப்படையில், குறித்த பெண்களை மீண்டும் நாட்டுக்குள் அனுமதிக்க அரசு முடிவெடுத்தபோது, அதனை எதிர்த்து கூட்டரசுக்கான தனது ஆதரவை “Frp” கட்சி விலக்கிக்கொண்டதோடு, கட்சியின் தலைவரான “Siv Jensen” அம்மையாரும் நிதியமைச்சர் பொறுப்பிலிருந்து விலகிக்கொண்டிருந்தார்.
கட்சியின் இம்முடிவு, ஆதரவாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தாலும், கட்சியின் பிரதான கொள்கைகள் ஆதரவாளர்களிடையே இன்னமும் பேராதரவு பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. கட்சித்தலைவர் “Siv Jensen” அம்மையார், 40 ஆண்டுகள் கடைசியில் பிரதான பொறுப்புக்களை வகித்துள்ளதோடு, 24 ஆண்டுகள் நாடாளுமன்ற அரசியலில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதோடு, 15 வருடங்களாக கட்சியின் தலைவராகவும் இருந்து வருகிறார்.
நோர்வேயின் அரசியல் வரலாற்றில் “Arbeiderpartiet /AP” (தொழிலாளர் கட்சி) அல்லது “Høyre /H” (வலதுசாரிக்கட்சி) ஆகிய காட்சிகள் பெரும்பான்மையோடு மாறிமாறி ஆட்சிக்கு வந்திருந்த நிலையில், எக்கட்சிக்கும் பெரும்பான்மை கிடையாமல் கூட்டரசு ஒன்று 2013 ஆம் ஆண்டில் அமைவதற்கு “Frp” கட்சியின் அதீத வளர்ச்சியும் பிரதான காரணங்களில் ஒன்றாக விளங்குகிறது.
தொழிலாளர் கட்சியின் ஆட்சிக்காலங்களிலேயே நோர்வேயில் அதிகமான வெளிநாட்டவர்களின் குடியேற்றங்கள் நிகழ்ந்ததாக தொடர்ச்சியாக குற்றம் சாட்டிவந்த “Frp” கட்சி, அது தொடர்பிலான கருத்துக்களை மக்கள் முன் கொண்டு சென்று பேராதரவை தேடிக்கொண்டதும் அக்கட்சியின் அதீத வளர்ச்சிக்கு காரணமாக அமைந்திருந்தது.
2013 வரை பல்லாண்டுகள் அரசாண்டுவந்த “தொழிலாளர்கட்சி” யின் வீழ்ச்சிக்கும், அக்கட்சி 2013 ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வி கண்டதுக்கும் “Frp” கட்சியின் வளர்ச்சியும், தீவிர பிரச்சாரமும் பிரதான காரணங்களாக இருந்திருக்கின்றன.

2013 ஆம் ஆண்டு தேர்தலில் “தொழிலாளர்க்கட்சி” தோல்வியடைந்து, “வலதுசாரிக்கட்சி” யோடு இணைந்து “Frp” கட்சி ஆட்சிபீடம் ஏறியபோது, தேர்தலில் தோல்வி கண்டிருந்த அப்போதைய “தொழிலாளர்கட்சி” தலைவரும், பிரதமரும், தற்போது “NATO” (நேசநாடுகளின் கூட்டமைப்பு) தலைவராகவும் இருக்கும் “Jens Stoltenberg” அவர்களை அவமதிப்பது போல் பொதுவெளியில் கருத்துரைத்தமைக்காக “Siv Jensen” அம்மையார் மிகுந்த கண்டங்களுக்கு ஆளானமை, அவரது அரசியல் வாழ்வில் கரும்புள்ளியாக அமைந்துவிட்டது.
பல்லாண்டுகள் தீவிர அரசியலின் பின், தனக்கான நேரமும் ஓய்வும் தேவைப்படுவதாக செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தாலும், கட்சிக்குள் சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள முரண்பாடுலகின் பிரதிபலிப்பே அம்மையாரின் பொறுப்பு விலகல் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
“Siv Jensen” அம்மையாரின் பொறுப்பு விலகலையடுத்து, கட்சியின் இன்னொரு தீவிர முன்னணி உறுப்பினராக இருக்கும் “Sylvi Lysthaug” அம்மையார் தலைமைப்பொறுப்பை ஏற்றுக்கொள்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. “Frp” கட்சி, தற்போதைய ஆளும் கூட்டரசில் அங்கம் வகித்தபோது, நீதியமைச்சராகவும், விவசாய அமைச்சராகவும், குடிவரவு அமைச்சராகவும், எரிசக்தித்துறை அமைச்சராகவும், நோர்வேயில் குடியேறும் வெளிநாட்டவர்கள், நோர்வே சமூகத்தோடு ஒன்றிணைந்து வாழ்வதை கவனிக்கும் அமைச்சராகவும் பல்வேறு காலகட்டங்களில் பொறுப்புக்களை வகித்திருந்த “Sylvi Lysthaug” அம்மையார், நோர்வேயில் குடியேறும் வெளிநாட்டவர்கள், நோர்வே சமூகத்தோடு ஒன்றிணைந்து வாழ்வதை கவனிக்கும் அமைச்சராக பொறுப்பு வகித்தபோது, வெளிநாட்டு பின்னணியைக்கொண்ட இளைய சமுதாயத்தினரிடையே அதிகரித்து காணப்படும் கிரிமினல் குற்றங்கள் தொடர்பில் கடுமையான கருத்துக்களை வெளிப்படுத்தியமைக்காக கடும் கண்டனங்களுக்கு உள்ளாகியிருந்தார்.

தனக்கு பிறகு கட்சியை தலைமையேற்று வழிநடத்த “Sylvi Lysthaug” அம்மையார் முன்வரவேண்டுமென பகிரங்க அழைப்பை “Siv Jensen” அம்மையார் விடுத்திருந்ததை அடுத்து, அதையிட்டு கருத்தேதும் தெரிவிக்க விரும்பவில்லையென “Sylvi Jensen” அம்மையார் தெரிவித்திருந்தாலும், எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள கட்சியின் நாடளாவிய மாநாட்டில் வைத்து, கட்சியின் தலைமைப்பொறுப்பை அவர் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்வாரென எதிர்வுகள் கூறப்படுகின்றன.