பொறுப்புக்கூறலுக்கு சர்வதேச பொறிமுறை! – அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் தீர்மானம்!

You are currently viewing பொறுப்புக்கூறலுக்கு சர்வதேச பொறிமுறை! – அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் தீர்மானம்!

இலங்கையில் இடம்பெற்ற போரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் பொறுப்புக்கூறலுக்காக சர்வதேச பொறிமுறை நிறுவப்பட வேண்டும்.அத்துடன், இலங்கை இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீா்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தி அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் தீா்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 12 வது ஆண்டு நிறைவை ஒட்டி அமெரிக்க பிரதிநிதிகள் சபை உறுப்பினர் டெபோரா ரோஸ் இந்தத் தீர்மானத்தை சபையில் முன்வைத்தார்.

இலங்கை இராணுவம் முள்ளிவாய்க்காலில் தாக்குதல்களை நடத்தி பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்று 12 ஆண்டுகள் கடந்துவிட்டன. இவ்வாறான படுகொலைகள் இடம்பெற்று ஒரு தசாப்தம் கடந்துவிட்டபோதும் குற்றவாளிகளைப் பொறுப்புக் கூறச் செய்ய இலங்கை அரசு தவறிவிட்டது.

அத்துடன், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் வழங்கிய வாக்குறுதிகளையும் இலங்கை நிறைவேற்றவில்லை.

போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு பரிகாரம் செய்யவோ, அவை குறித்து விசாரிக்கவோ, வழக்குத் தொடரவோ தவறி வருவதன் மூலம் இலங்கையில் தண்டனை விலக்குக் கலாச்சாரம் நிலவுகிறது எனவும் அந்தத் தீா்மானம் குறிப்பிடுகிறது.

உள்நாட்டு பொறுப்புக்கூறல் பொறிமுறை மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படும் என்று இலங்கை அரசு தொடர்ந்து கூறி வருகிறது. எனினும் அது செயற்படுத்தப்படவில்லை.

இலங்கையின் தமிழ் மக்கள் பல்லாயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர். பெருமளவானோர் காணாமல் போகச் செய்யப்பட்டனர். போரின்போது துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றன.

பல ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர நிாப்பந்திக்கப்பட்டனர் என்பதையும் தீா்மானம் வலியுறுத்தியுள்ளது. போரால் பாதிக்கப்பட்ட இலங்கையில் பாரம்பரிய தமிழர் தாயக பகுதிகளில் இரண்டு பொதுமக்களுக்கு ஒரு படைச் சிப்பாய் என களமிறக்கப்பட்டு அப்பகுதி இராணுவமயமாக்கப்பட்டுள்ளது எனவும் தீா்மானம் குறிப்பிடுகிறது.

மேலும், நிரந்தர அரசியல் தீர்வுக்காக வடக்கு, கிழக்கு மாகாண மக்களின் கருத்தறிய ஐ.நா. பொது வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என அழைப்பு விடுத்து வடக்கு மாகாண சபை தீா்மானம் நிறைவேற்றியைதையும் தீா்மானம் சுட்டிக்காட்டுகிறது.

அமெரிக்க பிரதிநிதிகள் சபை தீா்மானத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது.

(1) இலங்கையில் போர் முடிவடைந்த 12 -ஆவது ஆண்டு நிறைவில் மோதலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அமெரிக்க பிரதிநிதிகள் சபை ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறது.

(2) இறந்தவர்களை நினைவுகூர்ந்து மதிப்பளிப்பதுடன், நல்லிணக்கம், அபிவிருத்தி, இழப்பீடு மற்றும் மீள்கட்டுமானத்துக்காக ஏங்கும் இலங்கையில் உள்ள அனைத்து சமூக மக்களுடனும் ஆதரவாக நிற்பதை அமெரிக்கா பிரதிநிதிகள் சபை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

(3) மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆதாரங்களை சேகரிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் முன்னுரிமை அளித்ததற்காக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையை சபை பாராட்டுகிறது. இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கம் தலையிடக் கூடாது என வலியுறுத்துகிறது.

(4) காணாமல் போகச் செய்யப்பட்ட தமிழ் குடும்பங்கள் உட்பட, இலங்கையில் உள்ள அனைத்து சமூகங்களிலும் நீதிக்காக பாடுபடும் சட்டத்தரணிகளில் துணிச்சலையும் அர்ப்பணிப்பையும் சபை அங்கீகரிக்கிறது.

காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் உள்ளிட்ட போராடும் தரப்பினர் சில சமயங்களில் அரசாங்க பாதுகாப்புப் படையினரால் அச்சுறுத்தப்படுவதுடன், துன்புறுத்தல்களையும் எதிர்கொள்வதையும் சபை சுட்டிக்காட்டுகிறது.

(5) இலங்கையின் வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்டுவரும் வடக்கு, கிழக்கு பிராந்தியத்தின் அரசியல் உரிமைகள் மற்றும் பிரதிநிதித்துவத்தை ஏற்று, பாதுகாக்க முன்வருமாறு சர்வதேச சமூகத்தை சபை வலியுறுத்துகிறது. அத்துடன் இன மோதலுக்கு வழிவகுத்த அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஒரு நிரந்தர அரசியல் தீர்வை நோக்கி முன்னேற சபை அழைப்பு விடுக்கிறது.

(6) ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை உயர் ஸ்தானிகரின் பரிந்துரைகளுக்கு இணங்க விசாரணைகள் மற்றும் வழக்குகளை முன்னெடுக்க அமெரிக்கா பரிந்துரைக்கிறது எனவும் தீா்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் அதற்குப் பொறுப்புக்கூற வேண்டும். எனினும் இலங்கை அரசாங்கம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கத் தடையாக உள்ளதாக அமெரிக்க பிரதிநிதிகள் சபை உறுப்பினர் டெபோரா ரோஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்தை பொறுப்புக்கூற செய்யும் முயற்சியாக சர்வதேச பொறிமுறையை நிறுவுவதற்கான சர்வதேச சமூகத்தின் முயற்சிகளை நான் பாராட்டுகிறேன்.

மேலும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு நீதி வழங்கவும் பொறுப்புக்கூறலை உறுதி செய்யவும் இன்னும் தாமதமின்றிச் செயற்படுமாறு ராஜபக்ச அரசாங்கத்தை ஊக்குவிக்கிறேன் என தீர்மானத்திற்கு இணை தலைமை தாங்கிய ஜோன்சன் கூறினார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply