இலங்கையில் அமைதியான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டமை குறித்து ஜெனீவாவில் இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு இணை அனுசரனை வழங்கிய பிரித்தானியா தலைமையிலான நாடுகள் கரிசனை வெளியிட்டுள்ளன.
ஜெனீவாவில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 50 வது அமர்வில் கனடா பிரிட்டன் அமெரிக்கா ஜேர்மனி மலாவி மொன்டினீக்ரோ வடமசடோனியா ஆகிய நாடுகள் இணைந்து இந்த கரிசனையை வெளியிட்டுள்ளன.
இலங்கை கடந்த சில மாதங்களாக குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொண்டுள்ளது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம்,இதனால் இலங்கை மக்களிற்கு கடும் துன்பம் ஏற்பட்டுள்ளது.
அமைதியான முறையில் ஒன்றுகூடுதல் கருத்துசுதந்திரம் ஆகியவற்றிற்கான தங்களது உரிமையை ஆர்ப்பாட்டக்காரர்கள் சமீபகாலங்களில் பயன்படுத்தியுள்ளனர் என்பதை நாங்கள் கருத்தில் எடுத்துள்ளோம்.
அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான வன்முறை தாக்குதல் குறித்தும் அரசாங்கத்தின் அரசியல்வாதிகள் ஆதரவாளர்கள் மீதான வன்முறைகள் குறித்தும் நாங்கள் ஆழ்ந்த கவலையடைந்துள்ளோம். இந்த வன்முறைகளிற்கு காரணமானவர்கள் பொறுப்புக்கூறச்செய்யப்படவேண்டும்.
ஜனநாயகம்,மனித உரிமைகள் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றை உறுதிப்படுத்தவேண்டியதன் சுயாதீன ஸ்தாபனங்களை பேணவேண்டியதன் அவசியத்தை நாங்கள் வலியுறுத்துகின்றோம்.
நீண்டகாலமாக காணப்படும் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுதல் ஊழல் ஆகியவற்றிற்கு தீர்வை காணுமாறும், நல்லாட்சி மற்றும் சிறந்த பொருளாதார கொள்கைகளை முன்னிலைப்படுத்துமாறும் நாங்கள் இலங்கையின் ஆட்சியாளர்களை கேட்டுக்கொள்கின்றோம்.
சிவில் சமூகத்தினர் கண்காணிக்கப்படுவது அச்சுறுத்தப்படுவது தொடர்பான எங்கள் கரிசனைகள் தொடர்கின்றன சிவில் சமூகம் செயற்படுவதற்கான சூழலை பாதுகாக்கவேண்டியதன் அவசியத்தை நாங்கள் வலியுறுத்துகின்றோம்.
இலங்கை மனித உரிமை ஆணையாளருக்கும் அவரது அலுவலகத்திற்கும் ஆதரவை வழங்கவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம் என ஜெனீவாவில் இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு இணை அனுசரனை வழங்கிய பிரித்தானியா தலைமையிலான நாடுகள் தெரிவித்துள்ளன.