போதைப் பொருள் பாவனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கிளிநொச்சி அக்கராயன் பிரதேச மக்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
குறித்த கவனயீர்ப்புப் போராட்டம் சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகத்தின் ஏற்பாட்டில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது.
இதன்போது,பிரதேசத்தில் சவாலாக விளங்கும் போதைப் பொருளினைக் கட்டுப்படுத்தக் கோரிய மகஜர் மதத் தலைவர்கள் மற்றும் பொலிஸாருக்கு போராட்டக்காரர்களால் கையளிக்கப்பட்டது.
குறித்த பகுதியில் காணப்படும் அதிகரித்த போதைப்பொருள் பாவனை காரணமாக குடும்பங்களக்குள் நிம்மதியற்ற நிலை காணப்படுவதாகவும், குடும்ப வன்முறைகள் இடம்பெறுவதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால், பாடசாலை செல்லும் வயதை உடைய மாணவர்கள் குறித்த பழக்கத்திற்கு ஆளாகின்றனர் எனவும் கல்வி கற்கும் வயதில் குடும்ப நிலை காரணமாக தொழில்களுக்குச் செல்ல வேண்டிய நிலை சிறுவர்கள் மத்தியில் காணப்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், பிரதேசத்தில் காணப்படும் கசிப்பு, கஞ்சா போன்ற போதைப் பொருட்களை இல்லாது ஒழிக்க சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த போராட்டத்தில் கலந்து கொண்ட சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகத்தின் இணை பணிப்பாளர் அருட்தந்தை ரமேஸ் தெரிவிக்கையில், “போதைப்பொருள் பாவனையினால் மக்கள் மத்தியில் இன்று சமாதானமற்ற நிலை காணப்படுகின்றது.
இதனால் வாள்வெட்டுக்கள், வன்முறைகள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன.
இவற்றைக் கட்டுப்படுத்துவதற்காகவும், இப்பிரதேசத்தில் போதைப்பொருள் பாவனை தொடர்பாக விழிப்பினை ஏற்படுத்தும் வகையிலும் இவ்வாறான போராட்டத்தினை நாம் ஏற்பாடு செய்துள்ளோம்.
இவ்வாறான நிலையை உணர்ந்து போதைப்பொருள் பாவனையிலிருந்து விடுபட்டு நல்லதொரு சமூகத்தைக் கட்டியெழுப்பி சமாதானமான சூழலை நிலைநாட்ட அனைவரும் ஒன்றுசேர வேண்டும்” என அவர் தெரிவித்தார்.