போதை என்னும் அரக்கனை ஒழிக்க கலை என்னும் ஆயுதத்தை கையில் எடுத்துள்ளோம் என வலி தென் மேற்கு பிரதேச சபை தவிசாளர் அ.ஜெபநேசன் தெரிவித்தார்.
வலிகாமம் தென் மேற்கு பிரதேச சபையின் முழுநிலா கலைவிழா நிகழ்வு திங்கட்கிழமை மாலை பிரதேசசபை கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது இந்நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார் .
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்றைய காலகட்டத்தில் எமது சமுதாயத்தை போதை என்னும் அரக்கன் சிதைத்துக்கொண்டிருக்கிறான் இதிலிருந்து எமது சமுதாயத்தை பாதுகாக்க வேண்டியது அனைவரது பொறுப்பாகும் குறிப்பாக
எமது மாணவ சமுதாயத்தினை மிக இக்கட்டான சூழ்நிலையிலிருந்து காப்பாற்ற வேண்டியது நம் ஒவ்வொருவரதும் கடமையாகின்றது.
போதைப்பொருள் பாவனை, தொலைபேசி, தொலைக்காட்சிக்கு அடிமையாகுதல், கலாசார சீரழிவு, பாடசாலை இடைவிலகல், இளவயது திருமணங்கள் போன்றவையால் எமது மாணவ சமுதாயம் அதல பாதாளத்தினை நோக்கிச் சென்றுகொண்டிருகிகின்றது.
இவற்றிலிருந்து அவர்களை மீட்டெடுப்பதற்கான ஒரு வழிமுறையாகவே இந்நிகழ்வினை நாம் ஒழுங்கு செய்துள்ளோம்.
முன்னைய நாட்களில் இளையோரிடம் காணப்பட்ட தன்னம்பிக்கை, பக்தி, அர்ப்பணிப்பு, ஆன்மீக ஈடுபாடு, ஆழ்ந்த அறிவு, கலாசாரம் பண்பாடு, மூத்தோரைக் கனம் பண்ணுதல், குருபக்தி போன்ற நற்பண்புகள் இன்று உண்டா என்று நோக்கினால் நாம் என்ன நிலையில் உள்ளோம் என்பதை அறிந்துகொள்ள முடியும்.
எனவே தொடர்ந்தும் இவ்வாறான வாழ்க்கை முறையை நாம் வாழ்வோமானால் எமது எதிர்கால சந்ததிக்கு மிகப்பெரும் வரலாற்றுத் தவறை இழைத்தவர்களாவோம்.
எனவே இந்நிலையிலிருந்து எமது சமுதாயத்தை மீட்டெடுக்க முதல் கட்டமாக கலை என்னும் ஆயுதத்தினை நாம் கையிலெடுத்துள்ளோம். அந்த வகையில் எமது கன்னி முயற்சியாக நவம்பர் முழுநிலா கலைநிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு முற்று முழுதாக மாணவர்களுக்கான நிகழ்ச்சியாக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. மாணவர்களைக் கலை நிகழ்வுகளில் பங்குபெறச் செய்து, அவர்களுக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளை வெளிக்கொணர்ந்து அவற்றை மேடையேறுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கும் வகையிலும் இந்நிகழ்வு அமைந்துள்ளது.
தொடர்ந்து வரும் ஒவ்வொரு முழுநிலா தினங்களிலும் இந்நிகழ்வு நடத்தப்படவுள்ளது. எமது எதிர்கால சமுதாயம் தவறான பாதையில் செல்லாது சரியான வழியில் செல்வதற்கு வழிகாட்டிகளாக இருந்து அவர்களது எதிர்காலத்தை வளப்படுத்த ஒன்றுதிரள்வோம்.நாம் எமது எல்லைக்குள் இதனை ஆரம்பித்துள்ளோம் தொடர்ந்தும் இந்த முயற்சியை மேற்கொள்ளவுள்ளோம் என்றார்.