போராடாத மனிதனும் ஓடாத மானும் வாழ்ந்ததாக வரலாறில்லை!

You are currently viewing போராடாத மனிதனும் ஓடாத மானும் வாழ்ந்ததாக வரலாறில்லை!

சோத்து மாடுகளாகிவிட்ட யாழ் மக்கள்..

தையிட்டியில் குடியிருக்கும் மக்களுக்கு நிச்சயம் இந்த விகாரை கட்டுவது தெரிந்திருந்திருக்கும்.

தெரிந்திருந்தும் தன்வீட்டு பிரச்சினையில்லை என்று தங்கள் தங்கள் வேலையை பார்த்திருக்கிறார்கள்.

இன்றும் விகாரைக்கு எதிராக பௌத்த மயமாக்கலுக்கு எதிராக போராட்டம் நடக்கிறது.

அங்கே பாராளுமன்ற உறுப்பினர் நிக்கிறார். சட்டத்தரணிகள் நிற்கின்றனர், அந்த பகுதி மக்கள் எழுச்சி கொண்டு போராட்டத்தில் கலந்து கொள்வதாக தெரியவில்லை.

யாழ்ப்பாணத்திலுள்ள ஒரு துண்டுநிலத்தை பாதுகாக்க கூட வன்னியிலிருந்தும் திருகோணமலையிலிருந்தும் மக்கள் வந்து போராட வேண்டும் என்றால் அங்கே இருக்கிற மக்கள் ஏன் அங்கே வசிக்கிறார்கள்.?

அவர்களை பொறுத்த வரை இது அவர்கள் விட்டு பிரச்சனையில்லை.

இங்கே பலபேர் அப்படித்தான் தன்வீட்டுக்கு நடக்கும் வரை பேசாமல் அடுத்தவர் மீது பாரத்தை போட்டுவிட்டு தாம் தப்பித்து கொள்ள முனைகிறார்கள்.

அவர்களை பொறுத்தவரை தாங்கள் படிச்சு உத்தியோகம் பார்ப்பது வெளிநாடு செல்வது நன்றாக செலவளித்து வீட்டு நிகழ்வுகளையும் கோயில் தேவாலய நிகழ்வுகளை நடாத்துவது தினமும் போதையுடன் நிற்பது விலையுயர்ந்த மோட்டார் சைக்கிள்களில் திரிவது மட்டும் தான் வாழ்க்கையாக நினைக்கும் சோத்து மாடுகளாகிவிட்ட மக்கள்

தமிழர்கள் அரசியல் தொடர்பாக சிங்கள மக்களிடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

கோத்தா ஆட்சியில் சிங்கள மக்கள் கோட்டா கோகமவில் கட்சி பேதமின்றி கலந்து கொண்டு ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட எவ்வாறு பலலட்சம் பேர் எழுச்சி கொண்டார்கள் போராடினார்கள் வென்றார்கள் என்று சிந்திக்க வேண்டும்.

சட்டம் பொலிஸ் நிதிமன்றம் இராணுவம் எல்லாம் அவர்கள் மீது பாய்ந்தாலும் அவர்களது அந்த துணிவு எமது மக்களிடம் இல்லை என்பது வேதனையும் கவலையுமான விடயம்.

இன்று தமிழர் தேசமான வடக்கு கிழக்கில் சிங்கள மயமாக்கல் பௌத்த மயமாக்கல் மிக தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றது இது ஒரு திட்டமிட்ட இன அழிப்பு.

முல்லைத்தீவின் கால் பங்கு போய்விட்டது. வவுனியா மட்டக்களப்பின் அரைவாசி போய்விட்டது. திருகோணமலையின் முக்கால் பங்கு போய்விட்டது. அம்பாறை முழுவதும் போய்விட்டது.

நைனாதீவு கூட நாகதிப ஆகிவிட்டது.
வடக்கு கிழக்கெங்கும் விகாரைகள் முளைத்துக்கொண்டே இருக்கின்றது.

எமது மக்கள் புலம்பெயர இங்கே அந்த இடத்தை சிங்களவர்கள் நிரப்பிக்கொள்கின்றனர்.

இன்னும் 100 வருடங்களில் இது முற்றாக சிங்கள பௌத்த பூமியாகும்.

இன்னும் 200 ஆண்டுகளில் இங்கே சிங்களம் மட்டும் பேசத்தெரிந்த தமிழர்கள் தான் வாழும் நிலை கூட ஏற்படும்.

புலம்பெயர்ந்து அங்கே கொடிபிடித்து போராடி நாட்டை மீட்க போகின்றவர்கள் இங்கே தாயகம் வந்து ஒருபோதும் குடியேறப்போவதில்லை.

ஒருவேளை போராட்டத்தின் மூலம் தமிழர் தேசத்தை மீட்டெடுப்பட்டால் அந்த தேசத்தில் வாழ தமிழர்கள் இருக்கமாட்டார்கள், அதற்குள் தமிழ் இனமே அழிக்கப்பட்டிருக்கும்.

எமது பூர்வீக நிலத்தையும் சிங்களவர்களை குடியேற்றி பௌத்த அடையாளங்களை நிறுவி தமிழர் தொன்மையான வராலாற்றை மாற்றியமைத்தும் எமது தமிழ் மொழியை சிங்களமயமாக்கல் மூலம் அழித்தும் கலாச்சாரக் கட்டமைப்பை போதை மூலம் அழித்தும் பொருளாதாரத்தை மானிய உதவிகளாலும் நுண் கடன் மூலமாகவும் திட்டமிட்டவகையில் அழித்துக்கொண்டிருக்கும் சிங்களத்திடம் நாம் பலியாகிக்கொண்டிருக்கிறோம்..

எனவே அனைத்து தமிழ் மக்களும் உங்களுக்கும் இனமானம் இருந்தால் இந்த திட்டமிட்ட இன அழிப்புக்கு எதிராக அணிதிரளுங்கள்.

போராடாத இனம் வாழாது… வரலாற்றை நாம் மறந்தால் வரலாறு நம்மை மறந்துவிடும்.

மக்கள் விழித்துக்கொள்ளாதவரை விடுதலை என்பது சாத்தியமில்லை, விழிப்புத்தான் விடுதலைக்கு முதற்படி.. .

த.நிறஞ்சன்
மல்லாவி

பகிர்ந்துகொள்ள

Leave a Reply