பாராளுமன்ற சொத்துக்களுக்கு சேதம் விளைவித்து, பாராளுமன்றத்திற்குள் மிளகாய் தூள் தாக்குதலை மேற்கொண்டவர்கள் தண்டிக்கப்படாத நிலையில், ஜனநாயக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொதுச்சொத்து துஸ்பிரயோகத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளமை முற்றிலும் தவறானது.ஜனநாயக போராட்டத்தை சர்வாதிகாரமான முடக்கினால் அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ரணில் ராஜபக்ஷ மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை விடுத்து மக்களுக்காக குரல் கொடுப்பவர்களுக்கு எதிராக அடக்கு முறையை கட்டவிழ்த்து விடுகிறார்.அடக்கு முறையினை அரசாங்கம் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அரசமுறை கடன் 52 பில்லியனாக உயர்வடைந்துள்ளது. நாட்டில் பணவீக்கம் 60 சதவீதமாக காணப்படுகிறது.எரிபொருள் மற்றும் எரிவாயு ஆகியவற்றுக்கான தட்டுப்பாடு தொடர்ந்து நீடிக்கிறது.
பல்வேறு நெருக்கடியினை எதிர்கொண்டுள்ள மக்கள் போராட்டத்;தில் ஈடுப்பட்டுள்ளார்கள்.கடந்த மே மாதம் 09ஆம் திகதி முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாரவாளர்கள் காலி முகத்திடல் போராட்டகளத்தில் மீது வன்முறையான தாக்குதலை மேற்கொண்டதை தொடர்நது நாட்டில் பல்வேறு பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் தோற்றம் பெற்றன.இதனை தொடர்ந்தே மக்கள் போராட்டம் தீவிரமடைந்தது.
மக்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து கோட்டபய ராஜபக்ஷ பதவி விலகியதை தொடர்ந்து ராஜபக்ஷர்களின் ஆதரவுடன் ஜனாதிபதியாகிய ரணில் விக்கிரமசிங்க ராஜபக்ஷர்களை தொடர்ந்து பாதுகாப்பதற்காக ஜனநாயக ரீதியிலான போராட்டகாரர்கள் மீது மிலேட்சத்தனமான தாக்குதலை முன்னெடுத்துள்ளார்.போராட்டகாரர்களை தீவிரவாதிகள் என சுட்டிக்காட்டுவது முற்றிலும் தவறானது.
போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் அரச சொத்துகளுக்கு சேதம் விளைவித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
52நாள் அரசாங்கத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர்களினால் பாராளுமன்றத்தின் சொத்துக்கள் சேதமாக்கப்பட்டன,அதற்கான கானொளிகள் உள்ளன. இச்சம்பவம் தொடர்பில் வெலிகட பொலிஸ் நிலையத்தின் தனிப்பட்ட முறையில் முறைப்பாடு செய்துள்ளேன்.
குற்றப்புலனாய்வு பிரிவிற்கு வாக்குமூலமளித்துள்ளேன்.பாராளுமன்ற சொத்துகளுக்கு சேதம் விளைவித்தவர்கள்,மிளகாய் தூள் தாக்குதலை மேற்கொண்டவர்கள் என எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை.
சட்டம் சகலருக்கும் பொதுவாக செயற்படுத்தப்பட வேண்டும் பாராளுமன்ற சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தவர்களுக்கு எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காமல் ஆதாரமில்லாமல் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை கைது செய்வதை அரசாங்கம் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
மக்களின் ஜனநாயக போராட்டத்தை சர்வாதிகாரமான முறையில் முடக்கினால் அது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றார்.
பாராளுமன்றத்தில் அக்கிராசன உரையாற்றி தான் நாட்டின் ஜனாதிபதி என்பதை மக்களுக்கு காட்டுவதற்கே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்ற கூட்டத்தொடரை முடிவுறுத்தி இருக்கின்றார்.
அக்கிராசனத்தில் இருந்து உரையாற்றுவதன் மூலம் மக்களின் உள்ளத்தை வென்றுவிட முடியாது என ஐக்கிய மக்கள் சக்தி அரசியல் சபை உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பாராளுமன்ற கூட்டத்தொடர் முடிவுறுத்தப்பட்டிருப்பது தொடர்பாக நடத்திய செய்தியாளர் சந்த்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், இடைக்கால ஜனாதிபதியாக பாராளுமன்றம் மூலம் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் ரணில் விக்ரமசிங்க, தற்போது பாராளுமன்றத்தின் கூட்டத்தொடரை முடிவுறுத்தி இருக்கின்றார்.
நாட்டில் புதிய ஜனாதிபதி ஒருவர் நியமிக்கப்பட்டால் அவர் சம்பிரதாய முறைப்படி பாராளுமன்றத்தை ஆரம்பித்துவைத்து, சபாநாயகர் ஆசனத்தில் இருந்து கொள்கை பிரகடன உரையை ஆற்றுவது சாதாரண விடயம்.
ஆனால் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நிறைவேற்று ஜனாதிபதியாக பாராளுமன்றத்துக்கு வந்து, ராயல் சாடையில் மக்களுக்கு உரையாற்றி, தான் இந்த நாட்டின் ஜனாதிபதி என்பதை நாட்டு மக்களுக்கு காட்டுவதற்கே பாராளுமன்ற கூட்டத்தொடரை முடிவுறுத்தி இருக்கின்றார்.
ஆனால் பிரச்சினை இருப்பது, ஜனாதிபதி மக்களின் உள்ளத்தில் இருக்கவேண்டும். ஜனாதிபதி பாராளுமன்றத்தில் அக்கிராசனத்தில் இருந்து உரையாற்றியதன் மூலம் மக்களின் உள்ளத்தை வென்றுவிட முடியாது.
அத்துடன் மக்களின் உள்ளத்தில் இருக்கும் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற முடியுமான ஜனாதிபதியினாலே நாட்டை நிர்வகிக்க முடியும்.
அவ்வாறானவரே நாட்டு மக்களுக்கு விளங்கிக்கொள்ள முடியும். அப்படி இல்லாமல் பாராளுமன்ற டீல் மூலம் நிதி மூலம் மற்றும் வரப்பிரசாதங்களில் கிடைக்கப்பெற்ற வாக்குகளின் மூலம் இடைக்கால ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி ஒருவர், அக்கிராசன உரை நிகழ்த்தினாலும் தொடர்ந்து பாராளுமன்ற கூட்டத்தொடரை முடிவுறுத்தி எத்தனை விழா நடத்தினாலும் மக்களின் உள்ளத்தை வெற்றிகொள்ள முடியாது. இதுதொடர்பில் நாங்கள் கவலையடைகின்றோம் என்றார்.