முன்கள போர் வரிசையில் உக்ரைனிய ஆயுத படை நல்ல முன்னேற்றங்களை அடைந்து வருவதாக பிரித்தானிய உளவுத்துறை அறிவித்துள்ளது. 15 மாதங்களை கடந்து நடைபெற்று வரும் ரஷ்யாவின் போர் நடவடிக்கையில் தற்போது உக்ரைன் பதிலடி தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. இருநாட்டு ராணுவங்களும் உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதியில் தீவிரமாக சண்டையிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் போரின் முன்கள வரிசையில் உக்ரைனிய ஆயுதப்படை நல்ல முன்னேற்றங்களை அடைந்து வருவதாக பிரித்தானிய உளவுத் துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் உள்ள சில இடங்களில் கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் குறிப்பிடத்தக்க செயல்பாடுகளை உக்ரைன் நடத்தி வருகிறது. உக்ரைனின் இத்தகைய சிறப்பான செயல்பாடுகள் ரஷ்யாவின் முன்வரிசை பாதுகாப்பை உடைத்து வருவதாக தெரிவித்துள்ளது.
அதே சமயம் ரஷ்ய வீரர்கள் சிலர் தங்களது பாதுகாப்பு நடவடிக்கையில் சிறப்பான சூழ்ச்சிகள் செய்து வருவதாகவும், சில ரஷ்யர்கள் குழப்பத்தில் தங்கள் சொந்த கண்ணிவெடிகள் புதைக்கப்பட்ட வழியாக முன்வரிசையில் இருந்து பின்வாங்கி வரும் போது உயிரிழந்து வருவதாக பிரித்தானிய உளவுத் துறை அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.