இலங்கையில் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக அவுஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா, அயர்லாந்து, கனடா, தென்னாபிரிக்கா, சுவிஸ்லாந்து ஆகிய நாடுகளின் அரசாங்கங்கள் தடைவிதிக்கவேண்டும் என்று அந்தந்த நாடுகளைத் தளமாகக்கொண்டியங்கும் 9 புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.
இலங்கை அரசாங்கங்களினால் திட்டமிட்டு வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்ட இனப்படுகொலைகளால் புலம்பெயர் தமிழர்கள் அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் நண்பர்களையும் இழந்திருக்கின்றார்கள்.
அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பலர் நாட்டைவிட்டு வெளியேறி, வெளிநாடுகளில் வசித்துவருகின்றார்கள்.
அவர்கள் திட்டமிட்ட இனப்படுகொலையினால் ஏற்பட்ட வடுக்களிலிருந்து மீள்வதற்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியைப் பெற்றுக்கொள்வதற்கும் கடுமையாகப் போராடிவருகின்றார்கள் என்றும் அவ்வமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இலங்கையில் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இராணுவ அதிகாரிகளுக்கு எதிராகத் தாம் வசிக்கும் நாடுகளின் அரசாங்கங்கள் தடைவிதிக்கவேண்டும் என்று வலியுறுத்தி அவுஸ்திரேலியா தமிழ் காங்கிரஸ், பிரித்தானிய தமிழர் பேரவை, அயர்லாந்து தமிழர் பேரவை, பிரான்ஸை தளமாகக்கொண்டியங்கும் மைசன் டு தமிழ் ஈழம், கனேடியத்தமிழர்களின் தேசிய பேரவை, தென்னாபிரிக்காவைத் தளமாகக்கொண்டியங்கும் சமாதானம் மற்றும் நீதிக்கான ஒருமைப்பாட்டுக்குழு, சுவிஸ் தமிழ் செயற்பாட்டுக்குழு, இனப்படுகொலைக்கு எதிரான தமிழர் இயக்கம் மற்றும் ஐக்கிய அமெரிக்க தமிழர் செயற்பாட்டுக்குழு ஆகிய 9 புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதாவது,
இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறைகள் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறிய ஒரு மில்லியனுக்கும் அதிகமான தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் உறுப்பினர்களான நாம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் திரட்டப்பட்ட நம்பத்தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் இலங்கையில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராகத் தடைவிதிக்கவேண்டும் என்று நாங்கள் வாழக்கூடிய நாடுகளின் அரசாங்கங்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.
தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான மிகமோசமான மீறல்கள் தொடர்பில் நம்பத்தகுந்த வகையில் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கக்கூடிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரே தற்போது இலங்கை அரசாங்கத்திற்குத் தலைமைதாங்குகின்றனர்.
தமிழ்மக்களுக்கு எதிரான தீவிர பிரசாரம் மற்றும் தமது கட்டளையின்கீழ் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இராணுவ வீரர்களைப் பாதுகாப்பதாக அளிக்கப்பட்ட வாக்குறுதி என்பவற்றின் ஊடாகவே அவர்கள் ஆட்சியதிகாரத்திற்குத் தெரிவுசெய்யப்பட்டார்கள்.
இலங்கையில் ஆட்பீடமேறும் ஒவ்வொரு அரசாங்கங்களும் இதனையே தொடர்ந்து செய்கின்றன. அந்தவகையில் தற்போதைய அரசாங்கம் வெளிநாடுகளின் இராஜதந்திர அழுத்தங்களைக் குறைத்துக்கொள்ளும் நோக்கில் அரசநிர்வாகம் மற்றும் இராஜதந்திர ரீதியில் முக்கியமான பதவிகளுக்கு முன்னாள் இராணுவ அதிகாரிகளை நியமித்துவருகின்றது.
இலங்கை அரசாங்கங்களினால் திட்டமிட்டு வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்ட இனப்படுகொலைகளால் புலம்பெயர் தமிழர்கள் அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் நண்பர்களையும் இழந்திருக்கின்றார்கள்.
அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பலர் நாட்டைவிட்டு வெளியேறி, வெளிநாடுகளில் வசித்துவருகின்றார்கள். அவர்கள் திட்டமிட்ட இனப்படுகொலையினால் ஏற்பட்ட வடுக்களிலிருந்து மீள்வதற்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியைப் பெற்றுக்கொள்வதற்கும் கடுமையாகப் போராடிவருகின்றார்கள்.
போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக நம்பத்தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்ட சில இராணுவ அதிகாரிகள் தமது நாட்டிற்குள் நுழைவதற்கு பிரேஸில், கனடா, ஐக்கிய அமெரிக்க, பிரிட்டன் மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட சில நாடுகள் தடைவிதித்திருக்கின்றன. அதன் தொடர்ச்சியாக அண்மையில் இலங்கையின் இரு இராணுவ அதிகாரிகளும் அவர்களது குடும்பத்தினரும் தமது நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கு அமெரிக்க இராஜாங்கத்திணைக்களம் தடைவிதித்தது.
ஆகவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கையில் நம்பத்தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் மிகமோசமான மீறல்களில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் நபர்களுக்கு எதிராகத் தடைவிதிக்குமாறு நாம் வசிக்கும் நாடுகளின் அரசாங்கங்களிடம் கேட்டுக்கொள்கின்றோம் என்று அவ்வறிக்கையில் கோரப்பட்டுள்ளது.
அதுமாத்திரமன்றி மீறல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்குக் கட்டளை பிறப்பிக்கும் அதிகாரத்திலும் பொறுப்பிலும் இருந்தவர்கள் என்ற அடிப்படையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜெனரல் சரத்பொன்சேகா, ஜெனரல் சவேந்திர சில்வா, மேஜர் ஜெனரல் சத்யப்ரிய லியனகே, ஜெனரல் கமால் குணரத்ன, மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ், மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரிய உள்ளடங்கலாக 18 பேரின் பெயர்களையும் மேற்குறிப்பிட்ட புலம்பெயர் அமைப்புக்கள் தமது அறிக்கையில் உள்ளடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.