போர்க்குற்றம் இடம்பெறவில்லை, தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படவில்லை என்றால் ஏன் சர்வதேச விசாரணைக்கு இலங்கை ஏன் அஞ்சுகிறது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான எஸ்.சிறிதரன் கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற பந்தய சூதாட்ட விதிப்பனவு திருத்த சட்ட இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் சுட்டிக்காட்டினார்.
“முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் கனேடிய பிரதமர் வெளியிட்ட கருத்தை இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது. ஏற்றுக்கொள்ள முடியாது என குறிப்பிட்டுள்ளது. ஆனால் இலங்கை தொடர்பில் கனடா பிரதமரின் கருத்தை நாம் மதிக்கிறோம்
கனேடிய பிரதமர் வெளியிட்ட கருத்து தொடர்பில் இலங்கையில் உள்ள உயர்ஸ்தானிகரிகரிடம் வெளிவிவகா அமைச்சர் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். கனேடிய பிரதமரின் கருத்து இந்த நாட்டில் தமிழ் மற்றும் சிங்கள மக்கள் மத்தியில் பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் என்று வெளிவிவகாரத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்
இதன்மூலம் நாட்டில் இன முரண்பாடு உள்ளது என்பதை வெளி விவகாரத்துறை அமைச்சர் ஏற்றுக் கொண்டுள்ளார். இராணுவத்தினரிடம் பிள்ளைகளை ஒப்படைத்தோம், எமது பிள்ளைகளை தாருங்கள் என பாதிக்கப்பட்ட மக்கள் கோருவது நியாயமானதே இதனை எவ்வாறு பிரிவினைவாதம் என்று குறிப்பிட முடியும்.
காணாமல்போனார் விவகாரத்துக்கு ஒரு சிறந்த தீர்வை பெற்றுத் தருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். இதனையே ஆட்சியில் இருந்த அரச தலைவர்கள் அனைவரும் குறிப்பிடுகிறார்கள். இலங்கை ஆட்சியாளர்கள் சர்வதேசத்தை ஏமாற்றுகிறார்கள்.இதன் காரணமாகவே சர்வதேசம் இலங்கையை தொடர்ந்து வலியுறுத்துகிறது.
உண்மையை கண்டறிவதாக இலங்கை சர்வதேசத்துக்கு வாக்குறுதி வழங்கியது. அதனையே சர்வதேசம் இன்று கோருகிறது. யுத்த குற்றம் இடம்பெறவில்லை, தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படவில்லை என்றால் ஏன் சர்வதேச விசாரணைக்கு அச்சப்பட வேண்டிய தேவையில்லை.
இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பில் பிரித்தானியா, அமெரிக்கா உட்பட கரிசனை கொள்ள வேண்டும். தமிழர்கள் மீது படுகொலை கட்டவிழ்க்கப்படவில்லை, இரசாயன குண்டுத்தாக்குதல் பிரயோகிக்கப்படவில்லை என்றால் அரசாங்கம் சர்வதேச பொறிமுறை விசாரணைக்கு கதவைத் திறக்கலாம்.
இறுதி கட்ட யுத்தத்தில் பசியால் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் மரணித்ததை ஒருபோதும் மறுக்க முடியாது. இறுதி கட்ட யுத்தத்தில் இரசாயன குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது என்பதை பலர் தற்போது வெளிப்படுத்தியுள்ளார்கள், பலர் சாட்சியமளித்துள்ளார்கள்.” என்றார்.