போலியான முகக்கவசங்களை பாவித்த நோர்வே வைத்தியசாலை! “கொரோனா” அதிர்வுகள்!!

You are currently viewing போலியான முகக்கவசங்களை பாவித்த நோர்வே வைத்தியசாலை! “கொரோனா” அதிர்வுகள்!!

வட நோர்வேயின் பல்கலைக்கழக வைத்தியசாலையில் போலியான முகக்கவசங்கள் வழங்கப்பட்டு, அவை சுகாதாரப்பணியாளர்களால் பயன்படுத்தப்பட்டதாகவும், அதனால், சுமார் 200 வரையிலான பணியாளர்களுக்கு ” கொரோனா” பரிசோதனை செய்யப்படுவதாகவும் வைத்தயசாலையின் இயக்குனர் “Anita Schumacher” தெரிவித்துள்ளார்.

“கொரோனா” வால் பீடிக்கப்பட்டவர்களை கவனித்துக்கொள்வதற்கு முறையான முகக்கவசங்கள் அவசியமான நிலையில், அவற்றுக்கான பற்றாக்குறை நிலவுவதால், ஒரு தொகுதி முகக்கவசங்களை தனியார் நிறுவனமொன்றிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்டதாகவும், “P3” வகையிலான மேற்படி முகக்கவசங்களின் சரியான உற்பத்தி விபரங்களை பெற்றுக்கொள்ளும் பொருட்டு, குறித்த “P3” கவசங்களை தயாரிக்கும் நிறுவனத்தோடு தொடர்பு கொண்டு கேட்ட போது, அவ்வாறான கவசங்களை தான் தயாரிக்கவில்லையென்று அந்த அந்நிறுவனம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த தனியார் நிறுவனத்திடமிருந்து தம்மால் கொள்வனவு செய்யப்பட்ட கவசங்களில் “P3” என்ற பெயர் பொறிக்கப்பட்டிருந்ததால், அவை அசலானவை என்ற நம்பிக்கையுடனேயே தான் அவற்றை கொள்வனவு செய்ததாகவும், எனினும் அவை போலியானவையென தெரியவரும் முன்னரே சுமார் 800 கவசங்கள் பாவனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதோடு, அவையனைத்தும் “கொரோனா” நோயாளிகளை கவனித்துக்கொள்ளும் சுகாதாரப்பணியாளர்களுக்கே வழங்கப்பட்டதாகவும், இப்போது இந்தக்கவசங்கள் போலியானவை என்பதால் சுமார் 200 பணியாளர்களுக்கு “கொரோனா” பரிசோதனை செய்யவேண்டியுள்ளதாகவும் வைத்தியசாலையின் இயக்குனர் கவலை தெரிவித்துள்ளார்.

பொதுவாக “கொரோனா” நோயாளிகளை கவனிப்பவர்கள் பாவிக்கும் முகக்கவசங்கள் ஆகக்குறைந்தது 99.5 சதவிகிதமான வடிகட்டும் ஆற்றலை கொண்டிருக்க வேண்டுமெனவும், குறித்த “P3” வகையிலான கவசங்கள் உத்தரவாதமானவை என்ற நம்பிக்கையிலேயே குறித்த தனியார் நிறுவனத்திடமிருந்து கவசங்களை கொள்வனவு செய்யப்பட்டதாகவும், எனினும் கொள்வனவு செய்யப்பட்ட கவசங்களை “P3” நிறுவனம் தயாரிக்கவில்லையென தெரியவந்துள்ளதால், அவற்றின் தரம் தொடர்பான கேள்வி எழுந்துள்ளதால் முகக்கவசங்களை திரும்பப்பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ள வைத்தியசாலை இயக்குனர், தற்போதுள்ள அவசரகால நிலையில் மருத்துவ உபகாரணங்களுக்கு ஏற்பட்டுள்ள அபரிமிதமான பற்றாக்குறையின் காரணமாகவே தனியாரிடமிருந்து கவசங்களை கொள்வனவு செய்ததாகவும், தரக்குறைவான அக்கவசங்களாலால் நோயாளிகளும், பணியாளர்களும் மேலும் பாதிப்புக்குள்ளாவது கவலைக்குரியதெனவும் தெரிவித்துள்ளார்.

சர்ச்சைக்குரிய போலியான முகக்கவசங்கள் தற்போது நோர்வே இராணுவத்தின் ஆய்வுகூடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், இவற்றின் தரம் பற்றிய இராணுவத்தின் அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் வைத்தியசாலையின் இயக்குனரான “Anita Schumacher” மேலும் தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள