ருவன்வெலிசாயவைப் போன்ற பின்புல தோற்றத்தை தொழிநுட்பத்தினூடாக போலியாக உருவாக்கி ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றினார். இதன் ஊடாக மீண்டும் மக்கள் மத்தியில் பௌத்தம், சிங்களம் என்ன எண்ணப்பாட்டை தோற்றுவித்து அவர்கள் மனதில் இடம்பிடிக்கவே ஜனாதிபதி முயற்சித்துள்ளார் என்று பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,
தேர்தலின் போது எனக்கு உதவியர்களின் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்பதற்காக எம்மீது குறைகூறுகின்றனர். இதனால் உண்மை மழுங்கடிக்கப்பட்டு பொய் தலைதூக்கியுள்ளது என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
அவ்வாறெனில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முன்னர் மக்கள், சகாக்கள் அல்லது ஏனையோரிடம் இரகசிய ஒப்பந்தங்களை செய்து கொண்டு தற்போது அவற்றை நிறைவேற்றியமையின் காரணமாகவா எதிர்ப்புக்கள் மேலெழுந்துள்ளன என்று கேள்வியெழுப்புகின்றோம்.
ஜனாதிபதியின் உரையிலும் உண்மையை மழுங்கடித்து பொய் தலைதூக்கியுள்ளது. இவ்வாறு உண்மையை மறைப்பதற்காகவே ருவன்வெலிசேயவைப் போன்ற பின்புல தோற்றத்தை தொழிநுட்பத்தினூடாக போலியாக உருவாக்கி உரையாற்றியுள்ளார்.
இவ்வாறு ருவன்வெலிசாயவை மக்களுக்கு காண்பித்து புதிய நாடகத்தைப் போன்று பௌத்தம் மற்றும் சிங்களம் என்பவற்றை மீண்டும் மக்களுக்குள் ஏற்படுத்தி, மதம், இனம், நாடு மற்றும் யுத்தம் என்பவற்றை மீண்டும் நினைவுபடுத்தி மக்கள் மனதில் இடம்பிடிக்க ஜனாதிபதி முயற்சித்துள்ளார்.
இவ்வாறு தொழில்நுட்பத்தின் ஊடாக போலியான பின்புல தோற்றத்தைக் காண்பித்துள்ளமையின் ஊடாகவே ஜனாதிபதி பாரிய தோல்வியடைந்துள்ளார் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.