நோர்வேயின் புகழ் பெற்ற சட்டவாளராக விளங்கிய “Tor Kjærvik”, 12.04.21 அன்று அவரது இல்லத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். அவரது படுகொலைக்கு, அவரது நெருங்கிய உறவினர் காரணமென முன்னதாக செய்திகள் கசிந்திருந்த நிலையில், இப்படுகொலையை புரிந்தவர், கொலையுண்ட சட்டவாளரின் மகனென உத்தியோகபூர்வமாக நோர்வே காவல்துறை இன்று அறிவித்துள்ளது.
70 வயதான குறித்த சட்டவாளர், பெரும்பாலும் கொலை வழக்குகளில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக முன்னிலையாகி வாதாடியுள்ளதோடு, பல வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுத்தும் இருப்பதாக அவரது சகாக்கள் தெரிவித்துள்ளனர். குற்றம் சட்டப்பட்டவர்களுக்காக அவர் வாதாடினாலும், எல்லா வழக்குகளிலும் தனது வாதத்திறமையையும், சட்ட அறிவுக்கூர்மையையும் வெளிப்படுத்தி வந்தவரென மேலும் தெரிவிக்கும் அவரது சகாக்கள், குற்றவியல் வழக்குகளில் முன்னிலையாவதில் பெரும் புகழ் பெற்ற சட்டவாளர் “Tor Kjærvik” தனது மகனாலேயே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளமை அதிர்ச்சியளிப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
30 வயதான சட்டவாளரின் மகனுக்கும், சட்டவாளருக்கும் இடையில் பல்லாண்டுகளாக குடும்ப பிணக்குகள் இருந்ததாகவும், இப்பிணக்குகளின் உச்சநிலையில் சட்டவாளர் அவரது மகனால் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும், தந்தையை சுட்டுக்கொன்ற கொலையாளி, தனது தந்தையின் வாழ்க்கைத்துணையின் மீதும் துப்பாக்கிப்பிரயோகம் செய்துள்ளதாகவும், எனினும் அவர் உயிர் பிழைத்துள்ளதாகவும் தெரிவிக்கும் காவல்துறை, சட்டவாளரான தனது தந்தையை கொலை செய்தமைக்காகவும், சட்டவாளரின் வாழ்க்கைத்துணை மீது கொலை முயற்சியை மேற்கொண்டமைக்காகவும் சட்டவாளரின் மகன்மீது விசாரணைகள் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் மேலும் தெரிவித்துள்ளது.