M.I.A. என அழைக்கப்படும் இலங்கையை பூர்வீகமாக கொண்ட பிரபல ஆங்கில பாடகி மாதங்கி அருள்பிரகாசம் பிரித்தானிய மகாராணியின் கௌரவ விருதை பெற்றுள்ளார்.பிரித்தானிய மகாராணி இரண்டாவது எலிசபெத்தின் பிறந்த தினத்தை முன்னிட்டு இசைத்துறையில் பங்களிப்பு செய்தமைக்காக இந்த கௌரவ விருது வழங்கப்பட்டுள்ளது.
விருதுக்கான பதக்கத்தை Buckingham அரண்மனையில் இளவரசர் வில்லியம்ஸ், கடந்த செவ்வாய் கிழமை மாதங்கிக்கு அணிவித்துள்ளார்.
நிகழ்வுக்கு, மாதங்கி தனது தாயாரையும் அழைத்துச் சென்றிருந்தார். வருடாந்தம் வழங்கப்படும் மகாராணியின் இந்த விருதை பெறுவோரின் பட்டியல் கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்டது.
இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ள மாதங்கி, இது எனக்கு கிடைத்த கௌரவம் என்பது போல் எனது தாயாருக்கும் கௌரவம். எனது தாய் தனது வாழ்நாளில் பல மணி நேரங்களை செலவிட்டமைக்கு கௌரவிக்க வேண்டியது எனது தேவை.
கடந்த 30 ஆண்டுகளில் இந்த பதக்கங்களை தைத்த இங்கிலாந்தை சேர்ந்த இரண்டு பெண்களில் எனது தாயாரும் ஒருவர்.
இங்கிலாந்தில் அகதி அந்தஸ்து கிடைத்த பின்னர், 1986ம் ஆண்டு ஆங்கிலேயர் அல்லாத எனது தாயாரும், உறவினர் ஒருவரும் இந்த பணியை பெற்றுக்கொண்டனர்.
எனது தாய், மகாராணிக்காக ஆயிரம் பதக்கங்களை தைக்க தனது வாழ்நாளை செலவிட்டார்.
நான் உணரும் விதம், சிந்திக்கும் விதம் எதுவாக இருந்தாலும் எனது தாய் தனது தொழில் குறித்து பெருமையாக கருதுகிறார். இது எனக்கு விசேஷமான நிலைமை.
எனது தாய் மிகவும் குறைந்த சம்பளத்தில் செய்த தொழிலை நான் கௌரவிக்கின்றேன் எனவும் மாதங்கி அருள்பிரகாசம் தெரிவித்துள்ளார்.
மாதங்கி லண்டன் Hounslowஇல் பிறந்தவர். அவரது தந்தையான அருள்பிரகாசம் ஒரு பொறியியலாளர். மாதங்கி பிறந்து ஆறு மாதத்தில் அவர்களது குடும்பம் யாழ்ப்பாணத்திற்கு சென்று வசித்து வந்துள்ளார்.
இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போர் காரணமாக மாதங்கி 10 வயதாக இருக்கும் போது, அவரது குடும்பம் அகதிகளாக மீண்டும் லண்டனில் குடியேறியுள்ளனர்.
மேலும் இவரது தந்தையான அருளர் என அழைக்கப்படும், அருள்பிரகாசம் ஈரோஸ் அமைப்பின் ஆரம்ப கால உறுப்பினர்களில் ஒருவர் என்பதும் அண்மையில் யாழ்ப்பாணத்தில் காலமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)