இந்தியா-மகாராஷ்டிர மாநிலத்தில் பெய்துவரும் கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்களில் சிக்கி இதுவரை குறைந்தது 136 பேர் உயிரிழந்துள்ளனர்.அத்துடன் பலர் காணாமல் போயுள்ளனர். அவர்களை தேடும் பணிகளில் மீட்புப்பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
நூற்றுக்கணக்கான கிராமங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. பல வீடுகளும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இதனால் இலட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.
இரு மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் அதிகப்படியான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக வெள்ளியன்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மும்பையின் தென் கிழக்கு பகுதியில் உள்ள சிறிய கிராமம் ஒன்றில் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது 38 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
நேற்று வெள்ளிக்கிழமை மும்பை நகரில் கட்டடம் ஒன்று சரிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்ததுடன், 10 பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தின் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, அவசர ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அணைகளிலிருந்து நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை, மழை, வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட அனர்த்தங்களால் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் உயிரிழந்திருப்பது குறித்து `தாம் பெருந்துயர் அடைந்துள்ளதாக` இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டு ஹெலிகப்டரில் மீட்க வசதியாக பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் மொட்டை மாடிகளுக்கு செல்லுமாறு அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அடுத்த சில தினங்களுக்கு மும்பையில் கனமழை பெய்யும் என வானிலை முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் ஆபத்து மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.