வரவேற்புப் பதாகைகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் கூட தமிழர் உயிர்களுக்கு நாட்டில் கொடுக்கப்படவில்லை என்பதையே இன்றைய வாக்குமூலம் வெளிப்படுத்துவதாக தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.
பிரதமர் மகிந்த ராஜபக்சவின் யாழ். வருகையின் போது, ஆட்களைத் திரட்டி வந்து பிரதமரை வரவேற்பதற்கான பதாகைகளை எரித்தார்கள் என கிடைக்கப்பெற்ற முறைப்பாடு ஒன்றின் பிரகாரம் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் மற்றும் சாவகச்சேரி பிரதேச சபை உப தவிசாளர் செல்வரட்ணம் மயுரன் ஆகியோரிடம் வியாழக்கிழமை சிறீலங்கா காவல்த்துறையில் வாக்கு மூலம் பெறப்பட்டது.
வாக்கு மூலத்தின் பின் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், கிடைக்கப்பெற்ற முறைப்பாடு ஒன்றின் பிரகாரம் நாம் மட்டுவில் பகுதியில் ஆட்களைக் கூட்டிவந்து பிரதமரின் வரவேற்பு பதாகைகளை எரியூட்டியதாக எம் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இது தொடர்பில் எம்மிடம் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டது. நாம் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவினர்களுக்கு நீதி வேண்டி ஜனநாயக வழியில் குறித்த பகுதியில் போராடினோம் என்றும் யாரால் எரிக்கப்பட்டது என்பது தெரியாது எனவும் போராட்டம் ஜனநாயக வழியிலேயே இடம்பெற்றது என்பதையும் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படமுடியாதது என்பதையும் வலியுறுத்தியுள்ளோம்.
ராஜபக்சக்களின் ஆட்சியிலேயே ஆயிரக்கணக்காணவர்கள் வலிந்து காணாமலாக்கப்பட்டனர். இதற்கு நீதி கேட்டுப் போராடிய தாய்மார் மிருகத்தனமாகத் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை யாவரும் அறிந்ததாகும். தாய்மார்; தாக்கப்பட்டது பற்றி நாட்டில் விசாரணை இல்லை. ஆனால,; வீதிகளில் தூக்கப்பட்ட பதாகைகளை யார் எரித்தார்கள் என நாட்டில் பாரிய விசாரணைகள் நடைபெறுகின்றன. இது தான் இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் குறித்த நிலை. தாய்மார் தாக்கப்படும் போது நிகழ்வில் பேசிய பிரதமர் வடக்கிலுள்ளவர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தனக்குள்ளது என பொய்யுரைத்தார்.
தமிழர் உயிர்களைக் காட்டிலும் கட்டவுட்களுக்கு இலங்கையில் பாதுகாப்புள்ளது என்பதை தாய்மார் தாக்கப்பட்டதை கணக்கில் ஏனும் எடுக்காது பிரதமரின் பதாகை எரிக்கப்பட்டமை தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்கும் அரச அதிகாரத்தில் இருந்து புரிந்து கொள்ள முடிகின்றது என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளரும் ரெலோவின் மாவட்டப் பொறுப்பாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.