பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வாக்களிப்பதற்கான மக்களின் உரிமை, இறையாண்மை மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றைப் புறக்கணிக்கும் வகையில் சில அதிகாரம் பொருந்திய தரப்பினரால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம் என்று மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் 81 பேர் கூட்டாகத் தெரிவித்துள்ளனர்.
அதுமாத்திரமன்றி ஜனநாயகத்தைப் புறந்தள்ளுவதானது அரசியல் உறுதிப்பாடின்மை மேலும் தீவிரமடைவதற்கே வழிவகுக்கும்.
அது தற்போதைய பொருளாதார மீட்சி செயன்முறையிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஒஸ்டின் பெர்னாண்டோ, பவானி பொன்சேகா, பிரிட்டோ பெர்னாண்டோ, கலாநிதி தேவநேசன் நேசையா, கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன, கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து, கலாநிதி வின்யா ஆரியரத்ன, அருட்தந்தை ஜீவந்த பீரிஸ், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணி நுவன் போபகே, மிராக் ரஹீம், பேராசிரியர் ஜயதேவ உயன்கொட, கலாநிதி ராதிகா குமாரசுவாமி உள்ளடங்கலாக மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூகப்பிரதிநிதிகள் 81 பேர் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையிலேயே மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளனர். அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது;
உள்ளுராட்சிமன்றத்தேர்தல்களை எதிர்வரும் மார்ச் மாதம் 9 ஆம் திகதி நடாத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், அதனைப் பிற்போடுவதற்காகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின்மீது தொடர்ச்சியான அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவது குறித்து வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் நாம் மிகுந்த விசனமடைகின்றோம். அதுமாத்திரமன்றி இந்த அழுத்தங்கள் குறிப்பாக நிறைவேற்றதிகாரத்தரப்பு உள்ளிட்ட அரசாங்கத்தரப்பிடமிருந்தே உருவாகின்றன என்பது தெளிவாகியுள்ளது.
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வாக்களிப்பதற்கான மக்களின் உரிமை, இறையாண்மை மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றைப் புறக்கணிக்கும் வகையில் சில அதிகாரம் பொருந்திய தரப்பினரால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
பொருளாதார நெருக்கடியின் விளைவாகத் தோற்றம்பெற்றுள்ள சமூக – பொருளாதார சவால்களுக்கு மத்தியில் ஜனநாயக செயன்முறைகள், மக்களின் வாக்களிப்பதற்கான உரிமை மற்றும் இறையாண்மை ஆகியவற்றைப் புறந்தள்ளும் செயற்பாடுகளைத் தோற்கடிப்பதற்கு நாமனைவரும் ஒன்றிணையவேண்டும்.
ஜனநாயகத்தைப் புறந்தள்ளுவதானது அரசியல் உறுதிப்பாடின்மை மேலும் தீவிரமடைவதற்கே வழிவகுக்கும். அது தற்போதைய பொருளாதார மீட்சி செயன்முறையிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
இவ்வாறானதொரு பின்னணியில் திட்டமிட்ட காலப்பகுதியில் உள்ளுராட்சிமன்றத்தேர்தலை நடாத்துவதற்கு அரசியலமைப்பு ரீதியில் தேர்தல்கள் ஆணைக்குழு கொண்டிருக்கும் கடப்பாட்டை நிறைவேற்றுவதற்கு அவசியமான முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு ஜனாதிபதி, அரசாங்கம் மற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கு நினைவூட்ட விரும்புகின்றோம் என்று அக்கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.