மக்களின் காணிகளை அரசதிணைக்களங்கள் திருடுகின்றனர்!

You are currently viewing மக்களின் காணிகளை அரசதிணைக்களங்கள் திருடுகின்றனர்!
முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் உள்ளிட்ட வன்னிப்பகுதிகளில், வனவளத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் உள்ளிட்ட அரச திணைக்களங்கள் மக்களின் விவசாய மற்றும், குடியிருப்புக் காணிகளை அத்துமீறி திருடியுள்ளதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பாராளுமன்றில் குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளார்.

 

அதேவேளை இவ்வாறு மக்களின் காணித்திருட்டில் ஈடுபடும் திணைக்களங்ளில் ஒன்றான வனவளத் திணைக்களம் வன்னியில் இடம்பெறும் சட்டவிரோத காடழிப்புச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தி, வனவளத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் தெரிவித்தார். கடந்த 2009ஆம் இற்கு  முன்பு மரக்குற்றிகளால் நிரப்பப்பட்ட கனகரக வாகனங்களைக் கண்டதில்லை எனவும், மரம் அரிகின்ற இயந்திர வாள்களின் கொடூர ஓசையைக் கேட்டதில்லை எனவும் குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், வனவளத்தை தமிழீழ விடுதலைப்புலிகள் பாதுகாத்ததாகவும் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றில் புதன்கிழமை (12) இடம்பெற்ற 2025ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் மீதான குழுநிலை விவாதத்தில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

தலைமைதாங்கும் உறுப்பினரே, காணிவிடயங்களுக்கு பொறுப்பான அமைச்சர், பிரதிஅமைச்சர் அவர்களே, மக்களினதும், எனது கருத்துக்களையும் குறிப்பிடுகின்றேன்.

முன்னைய ஆட்சியில் திணைக்களங்களால் காணித்திருட்டுக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தங்களுடைய ஆட்சியில் இவ்வாறான காணித் திருட்டுக்கள் நீக்கப்படவேண்டும்.

வன்னிப்பெருநிலப்பரப்பு எப்போதும் காடுகளை அதிகமாகக்கொண்ட நிலப்புரப்பாகவே காணப்படுகின்றது. இங்குள்ள மக்களின் வாழ்வு தொன்று தொட்டு இயற்கையோடு இணைந்ததொன்றாகவே காணப்படுகின்றது. இங்குள்ள மக்கள் என்றும் இயற்கையோடு முரண்பட்டு கொண்டதில்லை. காடுகளை அழித்ததில்லை. 2009ம் ஆண்டுவரை வெட்டப்பட்ட மரக்குற்றிகளால் நிரப்பப்பட்ட கனகரக வாகனங்கள் எம் வீதியால் சென்றதை நாம் கண்டதில்லை.

மரம் அரிகின்ற இயந்திர வாள்களின் கொடூர ஓசையை நாம் கேட்டதில்லை. 2009ம் ஆண்டு வரை வனவளத்திணைக்களமும், வனஜீவராசிகள் திணைக்களமும், இங்கு எமது இடத்தில் இருக்கவில்லை. ஆனாலும் விடுதலைப்புலிகளின் வனவளப்பிரிவு இருந்தது. இயற்கையை நேசித்த வன்னியர்களின் வாழ்க்கைமுறை இருந்தது. இதனால் வனப்பகுதிகள் அழிக்கப்படவில்லை. காடுகள் அழிக்கப்பட்டு மரங்கள் வெட்டு மரங்களாகவும், விறகுத்தேவைகளுக்காகவும் பெருநகரங்களை நோக்கி ஏற்றிச்செல்லப்படவில்லை. காடுகள் மிகவும் கவனமாக காவல் செய்யப்பட்டன.

கடந்த 2010ஆம் ஆண்டிலும் அதன்பின்னரும்தான் வனவளத்திணைக்களத்தினதும், வனஜீவராசிகள் திணைக்களத்தினதும், நிர்வாகம் இங்கு நிலைநிறுத்தப்பட்டது.

சபாநாயகர் அவர்களே இதன் பின்னர்தான் வன்னிப்பெருநிலப் பரப்பின் காடுகள் குறையாடப்பட்டன.

மன்னாரில் முசலி உட்பட குறிப்பிட்ட சில இடங்களிலும், வவுனியாவில் பம்பைமடு உள்ளிட்ட சிலகுறிப்பிட்ட இடங்களிலும் அடர்காடுகள், ஒதுக்கப்பட்ட வனப்பகுதிகள் ஈவுஇரக்கமற்று கனகரக இயந்திரங்களால் மூர்க்கத்தனமாக சிதைக்கப்பட்டன. இவைகள் வனவளத்திணைக்களத்தின் அபகரிப்புக்கள் அல்லது, திருட்டுக்களாகவே கருதப்படவேண்டும்.

google earth time Line ஊடாகப் பாருங்கள் 2009ன்முன்பு வன்னிப்பெருநிலப் பரப்பில் வனவளம் எவ்வாறு பாதுகாக்கப்பட்டது என்பதையும், 2009ன்பின்பு வனப்பகுதிகள் எவ்வாறு சூறையாடப்பட்டது என்பதையும் அறியமுடியும்.

இன்றுவரை வனவளத்திணைக்களத்தின் செயல்பாடுகள் மிகவும் ஊழல் நிறைந்ததாகவே காணப்படுகின்றது. இதேபோலத்தான் வனஜீவராசிகள் திணைக்களமும் இங்கு செயற்பட்டுவருகின்றது. இவ்வாறு வனப்பகுதிகள், இயற்கை வாழ்விடங்கள் என்பவை சூறையாடப்படுவதற்கு காரணமாக இருக்கும் இத்திருட்டுத் திணைக்களங்கள் 2010ன் பின் எங்கள் வீட்டுமுற்றங்களையும் வயல் நிலங்களையும், தோட்டந் துரவுகளையும், ஏன்… வீதிகளையும் இடுகாடுகள், சுடுகாடுகளையும்கூட திருடத்தொடங்கி விட்டார்கள்.

2009ஆம் ஆண்டின் பின்னர் தற்போது நாட்டில் நடைமுறையில் உள்ள சட்டங்களையும், விதிகளையும் புறக்கணித்து மாவட்டச்செயலாளருக்கோ, பிரதேசச் செயலாளருக்கோ தெரியப்படுத்தாது, நிலஅளவைத் திணைக்களத்தின் ஊடாக வரைபடங்களையும் பெற்றுக்கொள்ளாமல், முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டும் 167,487 ஏக்கர் நிலப்பரப்பு வனவளத்திணைக்களத்தால் வனப்பிரதேசமாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்டச் செயலக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

அவ்வறிக்கையின்படி 1983ஆம் ஆண்டுதொடக்கம் 2009ஆம் ஆண்டுவரை உள்நாட்டுப்போர் காரணமாக இடம்பெயர்ந்த மக்களின் குடியிருப்புக்காணிகள், முத்தையன் கட்டுக்குள நீர்ப்பாசனத்திட்டம், தண்ணிமுறிப்புக்குள நீர்ப்பாசனத் திட்டத்தின்கீழ் மக்களுக்கு பிரித்து வழங்கப்பட்ட வயல்நிலங்கள், இன்னும் கமநல அபிவிருத்தித் திணைக் களத்தின் நிர்வாகத்தின்கீழ் இருக்கும் நீர்ப்பாசனக் குளங்கள் மற்றும், அவற்றின்கீழ் இருக்கும் வயல்நிலங்கள் என்பன வனவளத்திணைக்களத்தால் விதிமுறைகளை மீறிய வர்த்தமானி அறிவித்தல்கள் மூலம் ஒதுக்கப்பட்ட வனவளப்பிரதேசங்களாக வர்த்தமானப்படுத்தப்பட்டு இருக்கின்றன. என மாவட்ட புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இதே போல் 2009ஆம் ஆண்டின் பின்னர் வனஜீவராசிகள் திணைக்களத்தால் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேசச் செயலாளர் பிரிவில் 10,119 ஏக்கர் நிலப்பரப்பு நந்திக்கடல் இயற்கை வாழ்விடமாகவும், 10,925 ஏக்கர் நிலப்பரப்பு நாயாறு இயற்கை வாழ்விடமாகவும், சுண்டிக்குளம் தேசிய பூங்கா என புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பரிவிலும், சேர்த்து 48,357 ஏக்கர் பிரதேசத்தையுமாக மொத்தம் 69,401ஏக்கர் பிரதேசத்தை வனஜீவராசிகள் திணைக்களம் தங்களுடைய ஆளுகைக்குள் கொண்டு வந்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன என்றார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply