யாழ்ப்பாணம்- தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
யாழ் மாவட்டத்திற்கு விசேட விஜயம் செய்துள்ள ஜனாதிபதி இன்று இந்த நிலையத்தை திறந்து வைத்தார்.
யாழ்ப்பாண மக்களுக்கு சிறந்த குடிநீர் விநியோகத்தை வழங்கும் நோக்கோடு கடல் நீரை குடிநீராக்கும் இத்திட்டம் உருவாக்கப்பட்டது.
ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நிதி ஏற்பாடுகளின் கீழ் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு அமைச்சுஇ தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி நீர்வழங்கல் வேலைத்திட்டத்தின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் நீர்ப்பாசன மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோர் விசேட பிரதிநிதிகளாகக் கலந்து கொண்டனர்.
இந்த கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் 266 மில்லியன் டொலர்கள் செலவில் அமைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த திட்டம் ஆரம்பிக்கப்பட்ட வேளை வடமராட்சி கிழக்கு மக்கள் கடும் எதிர்ப்பினை தெரிவித்தனர். மக்களின் எதிர்ப்புக்களை மீறி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் மக்களின் நிலத்தை சிறீலங்கா அரசு தாரை வார்த்ததில் பெரும் பங்கு டக்கிளசையும் டக்கிளசின் அடிவருடிகளையும் சாரும் என்பது குறிப்பிடத்தக்கது.