விடுதலைப் புலிகளை ஆதரித்து முகநூல் பதிவிடுபவர்கள் கைது செய்யப்படுவர் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளிட்ட பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவோரைப் புகழ்ந்தும், நினைவுகூர்ந்தும் பகிரங்கமாக கருத்துத் தெரிவிப்பவர்கள் தகுதி தராதரம் பாராது கைது செய்யப்படுவார்கள் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஊடகங்களிலும், முகநூல் போன்ற சமூக ஊடகங்களிலும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களைப் போற்றியும், அவர்களை நினைவுகூர்ந்தும் கருத்துக்களை பதிவிடுபவர்களும் கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க இடமளியோம். அதைத் தடை செய்யும் நடவடிக்கையை காவல்துறையினரும், படையினரும் இணைந்து மேற்கொண்டுள்ளனர்.
கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களைப் புகழ்ந்தும், நினைவுகூர்ந்தும் சிலர் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
நாட்டில் பயங்கரவாத தடைச்சட்டம் நடைமுறையில் இருக்கின்ற போது இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் இனிமேல் கைது செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.
இச்செயலானது தமிழ்மக்களின் உணர்வுகளை உதாசீனம் செய்யும் சிறீலங்காப்படைகளின் காட்டுமிராண்டித்தனம் என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
கடந்த காலங்களாக சமூக ஊடகங்களின் இயக்குனர்களுக்கு தங்கள் இறுக்கமான நடவடிக்கைகளை முன்னெடுத்து அவர்கள் தமிழ்மக்களின் கணக்குகளை முடக்கிவந்த நிலையிலும் தமிழாமக்களின் உணர்வுகளை அடக்கமுடியாமல் போன அங்கலாய்பில் மீண்டும் இப்படியான அச்சுறுத்தல் வழி எமக்காக போராடிய தியாகிகளைப் பற்றி புகழக்கூடாது என எச்சரிக்கை விட்டுள்ளனர்.
விடுதலைக்காக வீழ்ந்தவர்களை வணங்குவதற்கே இவர்களுக்கு இவ்வளவு நடுக்கமாக இருக்கின்றது என்பதை உணரமுடிகின்றது. ஆனாலூம் எப்படித்தான் தடைபோட்டாலும் மக்களின் இதயத்தில் எப்போதும் தெய்வங்களாக வாழ்ந்து வழிநடத்திக்கொண்டே இருப்பார்கள் எமது மாவீரர்கள்.