பேரழிவை ஏற்படுத்தக்கூடிய, ஜனநாயகவிரோத உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தில் எத்தகைய திருத்தங்களையும் மேற்கொள்ளவேண்டிய அவசியமில்லை. மாறாக அச்சட்டமூலத்தை முழுமையாக வாபஸ்பெறுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். இல்லாவிடின் அதற்கு எதிராக அனைத்து சக்திகளையும் ஒன்று திரட்டி மாபெரும் மக்கள் போராட்டத்தை ஆரம்பிப்போம் என்று மனித உரிமைகள், சிவில் சமூக மற்றும் மாணவ செயற்பாட்டாளர்களும், தொழிற்சங்கவாதிகளும் கூட்டாக எச்சரித்துள்ளனர்.
அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் தொடர்பில் பல்வேறு எதிர்க்கருத்துக்களும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில், சகல தரப்பினரதும் யோசனைகளுக்கு அமைய அவசியமானதும், ஏற்றுக்கொள்ளத்தக்கதுமான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் அச்சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமென நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
இவ்வாறானதொரு பின்னணியில் அச்சட்டமூலத்தில் திருத்தங்கள் அவசியமில்லை எனவும், மாறாக அதனை முழுமையாக வாபஸ்பெறவேண்டும் எனவும் வலியுறுத்தி மனித உரிமைகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மாணவ செயற்பாட்டாளர்கள் மற்றும் தொழிற்சங்கவாதிகளென சுமார் 80 பேர் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
இலங்கையின் வரலாற்றைப் பொறுத்தமட்டில் ‘பயங்கரவாத எதிர்ப்பு’ என்ற பெயரில் இயற்றப்பட்ட சட்டங்கள் மக்களைக் காப்பதற்காகவன்றி, மக்களை அடக்குவதற்காகவே பயன்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி 1979 ஆம் ஆண்டில் ஜே.ஆர்.ஜயவர்தன அரசாங்கத்தினால் இயற்றப்பட்ட பயங்கரவாதத்தடைச்சட்டமும் ஜனநாயகத்துக்கு விரோதமான அடக்குமுறைச்சட்டமேயாகும். யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் ஊடாகப் பல்வேறு அடக்கமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.
1988 களிலும், யுத்தகாலத்திலும், உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத்தாக்குதல்களின் பின்னரும் இச்சட்டத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள், வலிந்து காணாமலாக்கப்படல்கள் உள்ளிட்ட மனித உரிமை மீறல் சம்பவங்களின் விளைவாக தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பயங்கரவாதத்தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும் என்ற பொதுக்கருத்து வலுப்பெற்றது.
இருப்பினும் இதுவரையில் எந்தவொரு அரசாங்கமும் அச்சட்டத்தை நீக்குவதற்கோ அல்லது அச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு, விசாரணைகளின்றி நீண்டகாலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கோ நடவடிக்கை எடுக்கவில்லை.
இவ்வாறானதொரு பின்னணியில் கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தின் மிகமோசமான ஆட்சிக்கு எதிராகவும், ஊழல் நிறைந்த சமூக, பொருளாதாரக்கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதை முன்னிறுத்தியும் உருவான அமைதிப்போராட்டத்தை நசுக்குவதற்கு ரணில் – ராஜபக்ஷ அரசாங்கத்தினால் இந்த அடக்குமுறைச்சட்டம் பயன்படுத்தப்பட்டது.
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே, அனைத்துப் பல்கலைக்கழக பிக்கு மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் கல்வௌ சிறிதம்ம தேரர் மற்றும் களனி பல்கலைக்கழக மாணவ செயற்பாட்டாளர் ஹஷான் ஜீவந்த ஆகியோர் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டதுடன், மேலும் நூற்றுக்கணக்கான மாணவ செயற்பாட்டாளர்கள் பயங்கரவாதத் தடுப்புப்பிரிவுக்கு அழைத்துவரப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில் தற்போது பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முழுமையாக இல்லாதொழிக்கவேண்டும் என்ற விடயம் பொதுமக்களின் மிகமுக்கிய கோரிக்கையாக மாறியுள்ளது.
இருப்பினும் ரணில் – ராஜபக்ஷ அரசாங்கம் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குவதாகக்கூறி, அதனைவிடவும் ஆபத்தான பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குத் தயாராகிவருகின்றது. ‘அடக்குமுறையின் கைகளில் ஆணிகளுக்குப் பதிலாக இரும்புக்கூர்முனையைப் பொருத்தும்’ பாணியிலானதொரு தீர்வே இதுவாகும்.
பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தில் ‘பயங்கரவாதம்’ என்ற சொல்லுக்கு வழங்கப்பட்டுள்ள வரைவிலக்கணத்தின்படி ‘அரசாங்கத்தின் எந்தவொரு எதிர்ப்பாளரும்’ பயங்கரவாதியாக முத்திரை குத்தப்படுவார்.
நாகரிக முன்னேற்றமடைந்த எந்தவொரு நாட்டிலும் கருத்துத் தெரிவிப்பதும், எதிர்ப்பு வெளியிடுவதும் அந்நாட்டுமக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அவ்வாறிருக்கையில் இந்நாட்டில் மக்களின் அடிப்படை உரிமையை இல்லாதொழிக்கும் நோக்கிலேயே பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் கொண்டு வரப்படுகின்றது.
சமூகவலைத்தளங்களில் முன்வைக்கப்படும் விமர்சனங்கள், ஊடக செய்திகள், அனைத்து வகையான போராட்டங்கள் மற்றும் பேரணிகளைத் தடைசெய்யும் வகையில் கொண்டுவரப்படும் இப்பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தை ஏற்றுக்கொள்வதென்பது நாட்டுமக்களின் ஜனநாயகத்தை ஒட்டுமொத்தமாகக் குழிதோண்டிப்புதைக்கும் செயலாகும்.
நாட்டுமக்களால் நிராகரிக்கப்பட்ட ஆட்சியாளர்கள், தமது தனிப்பட்ட அரசியல் தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்வதற்காக மக்களின் அடிப்படை உரிமைகளை சமரசம் செய்துகொள்வதற்கு இடமளிக்கக்கூடாது. எனவே பேரழிவை ஏற்படுத்தக்கூடிய உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அனுமதிக்கக்கூடாது.
அதன்படி ஜனநாயகவிரோத பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தை முற்றாக வாபஸ்பெறுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் அதேவேளை, இல்லாவிடின் அனைத்து சக்திகளையும் ஒன்றுதிரட்டி மாபெரும் மக்கள் போராட்டத்தை ஆரம்பிப்போம் என்றும் எச்சரிக்கின்றோம் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.