சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலமும், மனித உரிமைகள் தின நிகழ்வும் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் சர்வமத பேரவை ஆகியவையின் ஒத்துழைப்புடன் மட்டக்களப்பு கரித்தாஸ் எகெட் நிறுவகத்தினால் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதனையொட்டி மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இருந்து சமாதானத்தினை வலியுறுத்தும் வகையில் மாபெரும் ஊர்வலமொன்று நடைபெற்றுள்ளது.
சமூக ஈடுபாட்டுடனான வகை பொறுப்புக்கூறல் மூலம் நிலைமாற்றத்திற்கான முன்னெடுப்புகள் என்னும் தலைப்பில் இந்த விழிப்புணர்வு ஊர்வலம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஊர்வலமானது மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபம் வரையில் நடைபெற்றதை தொடர்ந்து அங்கு சர்வதேச மனித உரிமைகள் தினம் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் அஸீஸ், முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் த.ஜெயசிங்கம் உட்பட சர்வமத தலைவர்கள், கரித்தாஸ் எகெட் நிறுவகத்தின் இளைஞர் அமைப்பினர், கிராம மட்டக்குழுக்களின் உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.
இதன்போது மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்து வருபவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையிலான செயற்பாடுகள் குறித்து பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.