மதத் தலைவர்களிடையே பிரிவினையை ஏற்படுத்துகிறார் ரணில்!

You are currently viewing மதத் தலைவர்களிடையே பிரிவினையை ஏற்படுத்துகிறார் ரணில்!

மதத் தலைவர்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவது பெரும் பாவமாகும், அவ்வாறானதொன்றைச் செய்யாமல் ஈஸ்டர் ஞாயிறு தின சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க DW ஜேர்மன் அலைவரிசைக்கு வழங்கிய நேர்காணலில் கர்தினால்களுக்கும், இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவைக்கும் இடையே பரஸ்பர கருத்து வேறுபாடு உள்ளதான முன்னறிப்பு வெளியிடப்பட்டதாக சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பாக வண. ஹரோல்ட் அந்தோனி ஆயர் அறிக்கை வெளியிட்டு, அவ்வாறான எத்தகைய முரண்பாடுகளும் இல்லை என்று தெரிவித்துள்ளார் என்றும், ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளை அமுல்படுத்துமாறு கோருவதே அவர்களது ஒரே கோரிக்கையாக அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

சர்வதேச விசாரணை தேவை இல்லை என ஜனாதிபதி அந்நேர்காணலில் தெரிவித்திருந்த போதிலும், ஜனாதிபதியாக வருவதற்கு முன்னர் இவ்வாறான சர்வதேச விசாரணை அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியாக பதவியேற்ற உடனே இவ்வாறானதொரு மாற்றம் ஏன் ஏற்பட்டது என்று தான் கேள்வி எழுப்புவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

கர்தினால் மற்றும் இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை கோரும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறும், சனல் 4 காணொளி தொடர்பில் பாராளுமன்றக் குழுவினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளில் எவருக்கும் நம்பிக்கை இல்லை என்றும் குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தேசிய பொறிமுறையில் நம்பிக்கை இல்லை என்றும், எதிர்க்கட்சி என்ற வகையில் ஐக்கிய மக்கள் சக்திக்கும் தேசிய பொறிமுறை குறித்து நம்பிக்கை இல்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு விவாதத்தில் எழுப்பப்பட்ட விடயங்கள் தொடர்பில் புதிய விசாரணை தேவை என்றும், இதற்கு சர்வதேச உறவு ஏற்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply