யாழ்.நகரில் ஆரியகுளம் பகுதியில் வீதிச் சமிக்ஞையில் பயணித்து கொண்டிருந்த கணக்காளரான பெண்மணி ஒருவரின் மோட்டார் சைக்கிள் மீது மதுபோதையில் செலுத்தப்பட்ட வாகனம் மோதியதில் குறித்த பெண் படுகாயம் அடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் பிரதம கணக்காளராகப் பணியாற்றிய .கலைமதி என்பவரே உயிரிழந்துள்ளார்.
அவர் பல்வேறு திணைக்களங்களில் கணக்காளராகப் பணியாற்றி துறைசார்ந்தவர்களால் மதிப்பார்த்த ஒருவராக விளங்கி வந்த அரச உத்தியோகத்தர் என்று தெரியவந்துள்ளது.
விபத்துச் சம்பவம் நடைபெற்றபோது, வீதிச் சமிக்ஞையில் அவர் மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்தபோது, வீதிச் சமிக்ஞையை மீறிப் பயணித்த பட்டா ரக வாகனம் மோட்டார் சைக்கிள் மீது ஏறி விபத்துக்கு உள்ளாக்கியுள்ளது.
அங்கிருந்தவர்கள் விபத்தில் பாதிக்கப்பட்ட கணக்காளரை மீட்டு வைத்தியாசலைக்குக் கொண்டு சென்றிருக்கின்றனர். விபத்தை ஏற்படுத்திய நபர்கள், அங்கிருந்தவர்களுடன் முரண்பட்டிருக்கின்றனர். அப்போது அவர்கள் போதையில் இருந்ததை ஆதாரப்படுத்தும் காணொளிப்பதிகளும் அங்கிருந்த மக்களால் பதிவாக்கப்பட்டுள்ளன.
உடனடியாக அவர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டபோதிலும் போதையில் வாகனம் செலுத்தி விபத்தை ஏற்படுத்திய அவர்கள் பொலிஸாரால் விடுவிக்கப்பட்டுள்ளமை குறித்து மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கணக்காளர் வைத்தியசாலையில் உயிரிழந்த நிலையிலேயே அவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.