மனித உரிமை மீறல் குற்றவாளிகளுக்கு எதிராக கனடா தடைவிதித்துள்ள நிலையில், பிரிட்டனின் பழமைவாதக்கட்சி அமைச்சர்கள் அத்தகைய நடவடிக்கையை முன்னெடுப்பதற்குத் தொடர்ந்து மறுத்துவருவது குறித்து அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர் கரெத் தோமஸ் கடும் விசனம் வெளியிட்டுள்ளார்.
மிகமோசமான மனித உரிமை மீறல் குற்றங்களுடன் தொடர்புடைய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க மற்றும் லெப்டினன் கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி ஆகிய நால்வருக்கு எதிராக விசேட பொருளாதார நடவடிக்கைகள் சட்டத்தின்கீழ் தடைவிதிப்பதாக கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு எதிராகத் தடைவிதிக்கப்படவேண்டும் என பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் அந்நாட்டு அரசாங்கத்திடம் வலியுறுத்திவரும் பின்னணியில், கனேடிய அரசாங்கத்தின் நடவடிக்கையை மேற்கோள்காட்டி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே கரெத் தோமஸ் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
‘இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய அரச அதிகாரிகளுக்கு எதிராக கனேடிய அரசாங்கம் தடைவிதித்திருக்கின்றது.
ஆனால் இங்குள்ள பழமைவாதக்கட்சி அமைச்சர்கள் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை நிலைநாட்டுவதற்கு உதவும் வகையில் அத்தகைய நடவடிக்கையை முன்னெடுப்பதற்குத் தொடர்ந்து மறுத்துவருகின்றார்கள்’ என்று அவர் அப்பதிவில் தெரிவித்துள்ளார்.