மனித உயிரைவிட விளையாட்டு பெரிதல்ல : சர்வதேச கால்பந்து சம்மேளனம்.

  • Post author:
You are currently viewing மனித உயிரைவிட விளையாட்டு பெரிதல்ல : சர்வதேச கால்பந்து சம்மேளனம்.

கொரோனா வைரசின் தாக்கம் முழுமையாக சீராகும் முன்பே அவசரப்பட்டு கால்பந்து தொடர் போட்டிகளை தொடங்க வேண்டாம் என்று சர்வதேச கால்பந்து சம்மேளன (FIFA) தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரசின் கோரத்தாண்டவம் விளையாட்டுத் துறையையே புரட்டி போட்டுவிட்டது. 2-3 மாதங்களுக்கு எந்த போட்டிகளும் கிடையாது என்ற நிலைமை உருவாகி உள்ளது.

கால்பந்து விளையாட்டில் குறிப்பிட்ட நாடுகளில் நடத்தப்படும் லீக் போட்டிகளின் மூலம் ஆயிரக்கணக்கான மில்லியன்கள் பணம் புரளும். இதில் ஸ்பெயினில் நடக்கும் “லா லிகா – LaLiga”, இங்கிலாந்தின் “பிரிமீயர் லீக் – Premier League”, ஜெர்மனியில் அரங்கேறும் “பன்டெஸ் லிகா – Bundesliga”, இத்தாலியின் “லிகா சிரி ஏ லீக் – Liga Serie A League”, ஜெர்மனியின் “லிகு-1 – Ligue 1” போன்ற கால்பந்து தொடர்கள் மிகவும் பிரபலமானவை.

கொரோனா அச்சத்தால் இந்த போட்டிகள் எல்லாம் பாதியில் நிற்கின்றன. இதனால் சம்பந்தப்பட்ட நாட்டு கால்பந்து சம்மேளனங்கள் மிகப்பெரிய நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றன. உலக கோப்பைக்கான கால்பந்து தகுதி சுற்று போட்டிகளும் தள்ளிவைக்கப்பட்டுள்ளன என்பது யாவரும் அறிந்ததே.

இந்த நிலையில் கால்பந்து லீக் போட்டிகளை அவசரப்பட்டு தொடங்குவது ஆபத்தாகி விடும் என்று சர்வதேச கால்பந்து சம்மேளன (FIFA) தலைவர் கியானி இன்பான்டினோ (Gianni Infantino) எச்சரித்துள்ளார்.

மனித உயிரைவிட விளையாட்டு பெரிதல்ல : சர்வதேச கால்பந்து சம்மேளனம். 1

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ‘நாங்கள் நடத்தும் கால்பந்து போட்டிகளில் உடல் ஆரோக்கியம், பாதுகாப்பு ஆகியவற்றுக்கு தான் முதலில் முக்கியத்துவம் அளிக்கிறோம். மனித உயிரை விட விளையாட்டு பெரிது கிடையாது. அது தான் எங்களது முன்னுரிமை, நோக்கம்.

கழக போட்டிகளை நடத்துபவர்களையும் இதை பின்பற்றும்படி அறிவுறுத்துகிறோம். அதை நான் எவ்வளவு வலியுறுத்தி சொன்னாலும் போதாது. எந்த ஒரு ஆட்டம் அல்லது லீக் போட்டிகளுக்காக மனித உயிரை ஆபத்தில் சிக்க வைப்பது சரியானது கிடையாது. ஒவ்வொருவரின் மனதிலும் இந்த விஷயம் தெளிவாக இருக்க வேண்டும்.

நிலைமை 100 விழுக்காடு பாதுகாப்பாக இல்லாதபட்சத்தில் போட்டிகளை மறுபடியும் தொடங்கினால் அது மிகவும் பொறுப்பற்ற செயலாகி விடும். இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டும். என்றார்.

பகிர்ந்துகொள்ள