சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட எண்மரில் ஐவர் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்விவகாரம் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ள போதிலும், இதுவரையில் அதிகாரிகள் எவரும் சிறைச்சாலைக்கு சமுகமளிக்கவில்லை என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்
வவுனியா மாவட்டத்தின் வெடுக்குநாறிமலையில் உள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் கடந்த வெள்ளிக்கிழமை சிவராத்திரி தினத்தன்று பூஜை வழிபாடுகளில் ஈடுபடச்சென்ற பக்தர்களுக்கு பொலிஸாரால் இடையூறு விளைவிக்கப்பட்டதுடன், இரவு வேளையில் அங்கு வழிபாடுகளைத் தொடர முற்பட்டோர் அங்கிருந்து வலுகட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். அதுமாத்திரமன்றி ஆலயப்பூசகர் உள்ளடங்கலாக 8 பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.
மேற்குறிப்பிட்டவாறு கைதுசெய்யப்பட்ட 8 பேரின் விளக்கமறியல் எதிர்வரும் 19 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் திலகநாதன் கிந்துஜன், சுப்ரமணியம் தவபாலசிங்கம், துரைராசா தமிழ்ச்செல்வன், தம்பிராசா மதிமுகராசா மற்றும் இராசரத்தினம் விநாயகமூர்த்தி ஆகிய ஐவரும் கடந்த 3 தினங்களாக சிறைச்சாலையில் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
அவர்களது உடல்நிலை பலவீனமடைந்துள்ள போதிலும், இதுவரையில் சிறைச்சாலை வைத்தியர் அவர்களைச் சென்று பார்வையிடவில்லை என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் சுட்டிக்காட்டினார். அதுமாத்திரமன்றி அவர்கள் 3 நாட்களாக உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபடும் நிலையில், யாரும் உண்ணாவிரதம் மேற்கொள்ளவில்லை என சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப்பேச்சாளர் பொய்யுரைப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
மேலும் சிவராத்திரி தினத்தன்று பொலிஸாரால் எண்மர் கைதுசெய்யப்பட்ட போதும், அதற்கு மறுதினமும் இவ்விடயம் தொடர்பில் தாம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடளித்ததாகவும், ஆனால் இன்னமும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் எவரும் சிறைச்சாலைக்கு சமுகமளிக்கவில்லை எனவும் கஜேந்திரன் தெரிவித்தார்.
இதுபற்றி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளர் எல்.ரி.பி.தெஹிதெனியவிடம் கேட்டறிய முற்பட்ட போதிலும், அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை.