மனித உரிமைகள் பேரவைக்கு அழைப்பு விடுப்பது நாட்டை காட்டிக் கொடுக்கும் செயல்!

You are currently viewing மனித உரிமைகள் பேரவைக்கு அழைப்பு விடுப்பது நாட்டை காட்டிக் கொடுக்கும் செயல்!

நாட்டின் உள்ளக விவகாரங்களில் தலையிடுமாறு போராட்டக்காரர்களும், அரசியல் தரப்பினரும் சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு விடுப்பது நாட்டை காட்டிக்கொடுக்கும் ஒரு செயற்பாடாகும். இலங்கையில் பிரிவினைவாதத்தை வெற்றிக்கொள்ள மனித உரிமைகள் பேரவை ஊடாக நடவடிக்கை எடுக்கப்படுவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

இலங்கை கம்யூனிச கட்சி காரியாலயத்தில் மேலவை இலங்கை கூட்டணியின் உறுப்பினர்களுடன் இடம்பெற்ற சந்திப்பை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் இராஜாங்க அமைச்சுக்களை 38ஆக அதிகரித்துள்ளமை முற்றிலும் தவறானதொரு எடுத்துக்காட்டாகும்.

இராஜாங்க அமைச்சருக்கு பதிலாக அமைச்சரவை அமைச்சுக்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

மின்சாரம் மற்றும் வலுசக்தி துறை அமைச்சு பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில் அந்த அமைச்சுக்கு இரு அமைச்சர்கள் அவசியமா,சமூக கட்டமைப்பில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை விடுத்து அரசாங்கத்தின் உள்ளக பிரச்சினைகளுக்கு தீர்வு காணவே அதிக கவனம் செலுத்துகிறது.

நாட்டில் பொருளாதார நெருக்கடியை பிற தரப்பினர் தங்;களின் தேவைகளுக்காக பயன்படுத்திக்கொள்வார்கள் என்பதை ஆரம்பத்திலிருந்து குறிப்பிட்டோம்.

இலங்கையின் பொருளாதார பாதிப்பு தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் 51ஆவது கூட்டத்தொடரில் அவதானம் செலுத்தியுள்ளார்.

நாட்டின் உள்ளக விவகாரங்களில் தலையிடுமாறு போராட்டகாரர்களும், அரசியல் தரப்பினரும் மனித உரிமைகள் பேரவைக்கு அழைப்பு விடுப்பது நாட்டை காட்டிக் கொடுக்கும் ஒரு செயற்பாடாக கருதப்படும்.

இலங்கையில் பிரிவினைவாதத்தை ஏற்படுத்த ஐக்கிய அமெரிக்க ஆரம்ப காலத்தில் இருந்து முனைப்பாக செயற்பட்டது.

பிரிவினைவாதம் தோற்கடிக்கப்பட்டதை தொடர்ந்து மனித உரிமைகள் ஆணைக்குழு ஊடாக நாட்டில் மீண்டும் பிரிவினைவாதத்தை தோற்றுவிக்க பிரேரணைகள் ஊடாக முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அரசியல் கொள்கைகளுக்கு அப்பாற்பட்டு நாடு என்ற ரீதியில் சகல அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளோம் என்றார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply