ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் குறித்து சீனாவுக்கு அமெரிக்கா வகுப்பெடுக்கக்கூடாது என சீன துணை வெளியுறவு அமைச்சர் ஸீ ஃபெங் தெரிவித்தார்.
சீனாவுக்கு வகுப்பெடுக்க முன்னர் அமெரிக்கா தனது சொந்த மனித உரிமை பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
அமெரிக்க துணை வெளியுறவுத்துறை செயலாளர் வெண்டி ஷெர்மன் சீனாவின் துறைமுக நகரமான தியான்ஜினுக்கு நேற்று விஜயம் செய்தார். இன்று திங்கட்கிழமை சீன துணை வெளியுறவு அமைச்சர் ஸீ ஃபெங்கை அவர் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்புக் குறித்துக் கருத்து வெளியிடுகையிலேயே சீனாவுக்கு அமெரிக்கா பாடம் நடத்தக்கூடாது என ஸீ ஃபெங் கூறினார்.
அமெரிக்கா அதன் பூர்வீக குடிகளுக்கு எதிரான இனப்படுகொலையில் ஈடுபட்டது என்று ஸீ சுட்டிக்காட்டினார்.
சர்வதேச அளவில் அமெரிக்கா மேற்கொண்ட வலிந்த இராணுவத் தலையீடுகளால் தேவையற்ற பேரழிவுகள் ஏற்பட்டுள்ளன. இவ்வாறான நிலையில் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்காக உலகில் குரல் கொடுப்பதாக அமெரிக்கா தன்னை எவ்வாறு சித்தரிக்க முடியும்? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் குறித்து சீனாவுக்கு பாடம் நடத்தும் தகுதி அமெரிக்காவுக்கு இல்லை என்றும் ஸீ கூறினார்.