மனித உரிமை மீறல் குற்றவாளிகளுக்கு தடை கோருகிறார் சூக்கா!

You are currently viewing மனித உரிமை மீறல் குற்றவாளிகளுக்கு தடை கோருகிறார் சூக்கா!

இலங்கையில் மனித குலத்துக்கு எதிரான மிகமோசமான மீறல் குற்றங்களிலும், ஊழல் மோசடிகளிலும் ஈடுபட்ட அரச மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு எதிராக தடைகளையும், நுழைவு அனுமதித்தடையையும் விதிக்குமாறு வலியுறுத்தி அதனுடன் தொடர்புடைய 60 க்கும் மேற்பட்ட கோரிக்கைகளையும், ஆவணங்களையும் அமெரிக்கா, பிரிட்டன், அவுஸ்திரேலியா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் அரசாங்கங்களுக்கும், ஐ.நா சபைக்கும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம் அனுப்பிவைத்திருக்கிறது.

ஜொஹனஸ்பேர்க்கை தளமாகக்கொண்டு யஸ்மின் சூக்கா தலைமையில் இயங்கிவரும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டமானது இலங்கையின் அரச மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு எதிரான தடைகள் மற்றும் விசா அனுமதி தடைகள் தொடர்பான 60 க்கும் மேற்பட்ட கோரிக்கைகளைச் சமர்ப்பித்திருப்பதுடன் உலகளாவிய சட்ட வரம்பெல்லையின் பிரகாரம் வழக்குப்பதிவுகளையும் கோரியிருக்கிறது.

மனித உரிமைகள் தினத்தையொட்டி (எதிர்வரும் 10 ஆம் திகதி) தயாரிக்கப்பட்டிருக்கும் இக்கோரிக்கைகள் மற்றும் ஆவணங்கள் அமெரிக்கா, பிரிட்டன், அவுஸ்திரேலியா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் அரசாங்கங்களுக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

இவை இலங்கை இராணுவம், கடற்படை, விமானப்படை, பொலிஸ், புலனாய்வுப்பிரிவு அதிகாரிகள், நீதிபதிகள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் உள்ளிட்ட தரப்பினருடன் தொடர்புடைய கடந்தகால மனித உரிமை மீறல்கள் மற்றும் குறிப்பிடத்தக்க ஊழல் மோசடிகள் என்பன பற்றியவையாக இருக்கின்றன.

உள்நாட்டு யுத்தத்தின்போதும், அதற்குப் பின்னருமான காலப்பகுதியில் இடம்பெற்ற சட்டவிரோத படுகொலைகள், வலிந்து காணாமலாக்கப்படல்கள், பலவந்தமான கைதுகள் மற்றும் தடுத்துவைப்புக்கள், சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட மனித குலத்துக்கு எதிரான மிகமோசமான மனித உரிமை மீறல்களும், நாட்டின் அரச கட்டமைப்புக்களில் ஆழமாக வேரூன்றியிருக்கும் பாரிய ஊழல்களும் இக்குற்றங்களில் அடங்குகின்றன.

அதுமாத்திரமன்றி இம்மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதில் தடைகளை ஏற்படுத்தும் வகையிலான முறையற்ற தலையீடுகள், அதிகாரத்துஷ்பிரயோகங்கள் என்பனவும் இதில் உள்வாங்கப்பட்டுள்ளன.

இவற்றுக்கு மேலதிகமாக 1980 களின் இறுதியில் இலங்கையில் பணியாற்றிய இந்திய அமைதிகாக்கும் படையினரால் நிகழ்த்தப்பட்ட பாரதூரமான மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய இந்திய அமைதிகாக்கும் படையின் முன்னாள் அதிகாரிகளுக்கு எதிராகவும் தடைகளை விதிக்கும்படி மேற்குறிப்பிட்ட ஆவணங்களில் கோரப்பட்டுள்ளது.

இந்நடவடிக்கை தொடர்பில் கருத்து வெளியிட்டிருக்கும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் யஸ்மின் சூக்கா, ‘கடந்தகால மீறல்கள் தொடர்பில் இற்றைவரை பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படாத நிலையில், கடந்தகால மற்றும் சமகால குற்றங்களை ஆவணப்படுத்தி, அவற்றுக்கான சான்றுகளைப் பகுப்பாய்வு செய்து, உண்மையைக் கண்டறிவதற்கு ஏதுவான சகல வழிமுறைகளையும் உரியவாறு பயன்படுத்திக்கொள்வது இன்றியமையாததாகும்.

அதேவேளை இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக நம்பத்தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் இலங்கை அதிகாரிகளுக்கு எதிராக பிரிட்டனின் தற்போதைய புதிய அரசாங்கம் எதிர்வரும் 10 ஆம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினத்தன்று தடைகளை விதிக்கும் என எதிர்பார்க்கின்றோம்’ எனத் தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply