மனித புதைகுழிகளை தோண்ட எந்த அரசும் முழு ஆதரவு வழங்கவில்லை!

You are currently viewing மனித புதைகுழிகளை தோண்ட எந்த அரசும் முழு ஆதரவு வழங்கவில்லை!

மனித புதைகுழிகளை தோண்டும் நடவடிக்கைகளுக்கு இலங்கையில் எந்த அரசாங்கமும் இதுவரை நூறு வீத ஆதரவை வழங்கவில்லை என தெரிவித்துள்ள சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ். ரத்னவேல், அரசாங்கங்களிடம் இது தொடர்பாக அரசியல் உறுதிப்பாடு இல்லை என தெரிவித்துள்ளார்.

கொழும்பில் காணாமல்போனோரை தேடியறியும் குழுவினர் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இதனை அவர் தெரிவித்தார்.

பலவந்தமாக காணாமலாக்கப்படுதல் என்பது மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் மிகவும் பாரதூரமானது. பலவந்தமாக காணாமலாக்கப்பட்டவர்களின் தாய்மார்களும் குடும்பத்தவர்களும் பெரும் துயரத்தினை அனுபவிக்கின்றனர் , நம்பிக்கையற்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

இறுதிமுடிவொன்று இல்லாததால் அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் இந்த துயரத்தை அனுபவிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.தங்கள் இறுதிநாட்கள் வரை பலவந்தமாக காணாமலாக்கப்பட்டவர்களின் தாய்மார்களும் குடும்பத்தவர்களும் துயரத்தை அனுபவிக்கின்றனர்.

செம்மணி , வந்தாறுமூலை மன்னார் சதொச கொக்குத்தொடுவாய் என பல இடங்களில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. செம்மணியில் மீண்டும் சமீபத்தில் மாநகரசபையினர் கட்டுமானப்பணியில் ஈடுபட்டிருந்தவேளை அதற்காக தோன்றியவேளை பல எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன.

செம்மணியில் புதிதாக மீட்கப்பட்ட மனித எச்சங்கள் குறித்து புதிய விசாரணைகள் இடம்பெற உள்ளன. எனினும் இதற்கான நிதி இன்னமும் ஒதுக்கப்படவில்லை.

மனித புதைகுழிகளை அரசாங்கம் உரிய முறையில் கையாளவில்லை. இந்த விடயத்தில் முற்றிலும் அரசியல்உறுதிப்பாடு அற்ற நிலையே நிலவுகின்றது.பொலிஸாரும் உரிய ஒத்துழைப்பை வழங்குவதில்லை.

அரசாங்கம் மனித புதைகுழிகளை தோண்டுவதற்கான நிதியை ஒதுக்கீடு செய்வது அதற்கான ஆட்களை ஒதுக்கீடு செய்வது போன்றவற்றில் பிரச்சினைகள் உள்ளன.

மனித புதைகுழி அகழப்படும் விடயத்திற்கு பல நிபுணர்கள் தேவை- ஒருங்கிணைத்து செயற்படவேண்டும் ,எஙகள் நாட்டை பொறுத்தவரை இது புதிய விடயம்.

ஆர்ஜென்டீனா சிலி போன்ற நாடுகளில் இராணுவ ஆட்சிக்காலத்தில் பலர் கொல்லப்பட்டனர்.ஆனால் அதன் பின்னர் ஆட்சிக்கு வந்தவர்கள் மனித புதைகுழிகளைதோண்டும் விடயத்தில் மிகவும் நம்பகதன்மை மிக்க விதத்தில் செயற்பட்டனர்.பொதுமக்களின் பங்களிப்பை ஊக்குவித்தனர்.மனித புதைகுழிகள் அகழப்படும்போது பொதுமக்கள் பார்க்ககூடிய நிலை கூட காணப்பட்டது.

ஆனால் எங்கள் நாட்டில் மனித புதைகுழிகளை தோண்டும்போது மக்களை ஊடகவியலாளர்களை அனுமதிப்பதில்லை.

மன்னார் சதொச மனித புதைகுழியை தோண்டும் நடவடிக்கைகள் சட்டமா அதிபரின் தலையீட்டால் முடங்கின.இது அவருக்கு தொடர்பில்லாத விடயம்.அங்கு அகழ்வுதான் இடம்பெற்றதே தவிர குற்றச்செயல்கள் தொடர்பான விசாரணைகள் இடம்பெறவில்லை.ஆகவே அது அவருக்கு தொடர்பில்லாத விடயம். அவரின் தலையீட்டால் எதிர்மறையான பாதிப்பு ஏற்பட்டது.

சதொச மனித புதைகுழி அகழ்வின் போது சம்மந்தப்பட்ட தரப்புகள் சட்டமா அதிபரை உள்ளே கொண்டுவந்தன.

அரசாங்கம் மனிதபுதைகுழிகள் தோண்டப்படுவதை குழப்புவதற்கு பல வழிமுறைகளை கையாளும்,நிதியை விலக்கிக்கொள்வதன் மூலம் அகழ்வை குழப்பும்.அகழ்வு நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது நிதி இல்லை என தெரிவிப்பார்கள்.

ருவாண்டா சிலி போன்ற நாடுகளில் மனித புதைகுழிகளை தோண்டுவதற்கு அரசாங்கங்கள் நிதியை வழங்கின. ஆனால் இங்கு அரசாங்கங்கள் வெளிநாடு நிதியை கூட தடுக்கின்றன, இதுதான் எங்களின் அனுபவம்.

அரசாங்கம் மனித புதைகுழிகளை தோண்டும் நடவடிக்கைகளை குழப்பும்போது பாதிக்கப்பட்ட மக்கள் நம்பிக்கை இழக்கின்றார்கள் நாங்கள்மீண்டும் அவர்களிடம் செல்லும்போது என்ன பிரயோசனம் என கேட்கின்றார்கள் ஆனாலும் ஒத்துழைப்பைவழங்குகின்றார்கள்.

மீட்கப்படும் மனித எச்சங்கள் எந்த காலத்தை என்பதை அறிவதற்காக ஆய்வுகூடங்களிற்கு அனுப்பவேண்டும், வெளிநாட்டு ஆய்வு கூடங்களிற்கே அவற்றை அனுப்பவேண்டும்.ஆனால் அரசாங்கம் நிதி வழங்க மறுக்கின்றது.

முல்லைத்தீவில் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களின் உடல்கள் என கருதப்படும் 42 உடல்களை மீட்டுள்ளோம்.

செம்மணியில் 600க்கும் மேற்பட்ட உடல்கள் உள்ளதாக அந்த பகுதியில் வாழ்ந்த மக்கள் இன்னமும் கருதுகின்றனர்.கைதுசெய்யப்பட்ட 600 பேரின் பெயர் விபரங்கள் அவர்களிடம் உள்ளன.இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டனர் என அந்த பகுதி மக்கள் கருதுகின்றனர்.

இது மிகவும் கடினமான பணி ஆனால் எவ்வளவு தூரத்திற்கு இந்த அகழ்வு பணியை சிறப்பாக முன்னெடுக்கமுடியுமோ அவ்வளவு தூரம் முன்னெடுக்கின்றோம்.

மிகமிக முக்கியமான விடயம் என்னவென்றால் அரசாங்கங்களிடம் இது தொடர்பில் அரசியல் உறுதிப்பாடு இல்லை என்பதே . மிகமிக முக்கியமான விடயம் . எந்த அரசாங்கம் வந்தாலும் அவர்கள் 100 வீத ஆதரவை வழங்க தயாரில்லை, சந்திரிகா அரசாங்கமாகயிருந்தாலும் சரி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கமாகயிருந்தாலும் சரி.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply