வவுனியாவில் மனைவியின் சகோதரியான சிறுமி மீது பாலியல் குற்றம் புரிந்து பெண் குழந்தை பெறுவதற்கு காரணமாக இருந்த சகோதரியின் கணவருக்கு கடூழிய சிறைத் தண்டனை விதித்து நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.
இக்குற்றச் சம்பவம் வைகாசி மாதம் 2013ஆம் ஆண்டு இடம்பெற்றுள்ளது.
தன்மீது பலாத்காரமாக நடந்து கொண்டதாக சிறுமி சாட்சியம் அளித்துள்ளதுடன், அப்போது சிறுமிக்கு 14 வயது என்பது குறிப்பிடத்தக்கது.
பிறந்த குறித்த குழந்தையின் மரபணு பரிசோதனையில் (DNA) சகோதரியின் கணவரான எதிரியே தந்தை என உறுதிப்படுத்தி இரசாயன பகுப்பாய்வு அறிக்கை நீதிமன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இரு தடவைகள் பாலியல் குற்றம் புரிந்ததாக சட்டமா அதிபர் குற்றப்பத்திரம் தாக்கல் செய்திருந்தார்.
சிறுமி சாட்சியம் அளித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் DNA அறிக்கை நீதிமன்றில் இலக்கமிடப்பட்ட போது எதிரி குற்றத்தை ஏற்று தானே குற்றவாளி என மன்றுக்கு தெரிவித்தார்.
இந்த நிலையில் இரு குற்றங்களுக்கு தலா 7 ஆண்டுகள் சிறையும், ஆறு இலட்சம் ரூபா நட்டஈடு கட்ட வேண்டும் எனவும் அதனை கட்ட தவறும் பட்சத்தில் 4 ஆண்டு கடூழிய சிறையும் 6000 ரூபா தண்டப்பணமும் கட்டத்தவறும் பட்சத்தில் இரு மாத கடூழிய சிறையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அத்துடன் குழந்தையின் பிறப்பத்தாட்சி பத்திரத்தில் தந்தையின் பெயராக எதிரியின் பெயரை இடுவதற்கு எதிரி மறுத்து வருவதாகவும் அதனால் பிறப்பத்தாட்சி பத்திரம் பதிய முடியவில்லை எனவும் அரச சட்டவாதி நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வநதார்.
இந்த நிலையில் எதிரியின் பெயரை தந்தையின் பெயர் வர வேண்டிய இடத்தில் பெயரிடுமாறு பிரதேச செயலாளருக்கு நீதிபதி இளஞ்செழியன் விசேட உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் தனது சகோதரிக்கு நடந்த அநீதியை அடுத்து எதிரியான கணவனை விட்டு மனைவி பிரிந்து சென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.