பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் மீது முட்டை வீச்சு தாக்குதல் நடத்திய இளைஞருக்கு 100 பவுண்டுகள் அபராதம் மற்றும் வழக்கு செலவுக்காக 85 பவுண்டுகள் செலுத்தும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரித்தானியாவின் யோர்க்(york) நகருக்கு மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணி கன்சார்ட் கமிலா ஆகிய இருவரும் விஜயம் செய்த போது, அவர்கள் மீது இளைஞர் ஒருவர் முட்டை வீசி தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
யோர்க் நகர மக்களை சந்தித்து பேசி அவர்களுடைய வாழ்த்துகளை மன்னர் மூன்றாம் சார்லஸும், குயின் கன்சார்ட் கமிலாவும் பெற்றுக் கொண்டு இருந்தனர்.
அப்போது யாரும் எதிர்பாராத வகையில், ஹாரி மே(21) என்ற இளைஞர் ஒருவர் மன்னர் சார்லஸ் மீது முட்டைகளை வீச முயன்றார். அதிர்ஷ்டவசமாக அவை அனைத்தும் தரையில் விழுந்து நெருங்கியதால் மன்னர் மூன்றாம் சார்லஸும் ராணி கன்சார்ட் கமிலாவும் பாதிப்பு எதுவும் இல்லாமல் தப்பினர்.
இதையடுத்து மன்னர் மீது முட்டை வீச்சு தாக்குதல் நடத்திய நபரை மடக்கி பிடித்து பொலிஸார் கைது செய்தனர், அப்போது இந்த நாடு அடிமைகளின் இரத்தத்தால் உருவாக்கப்பட்டது என கைது செய்யப்பட்ட இளைஞர் கோஷமிட்டார்.
வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், ஹாரி மே(21) என்ற இளைஞர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
இதனால் அவருக்கு 100 பவுண்டுகள் அபராதம் மற்றும் வழக்கு செலவுக்காக 85 பவுண்டுகள் செலுத்தும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் “ஒருவர் மீது உங்களுக்கு கருத்து வேறுபாடு இருந்தால், அதை தீர்ப்பதற்கான வழி இது போன்ற பொருட்களை வீசுவது அல்ல” என நீதிபதி கண்டித்துள்ளார்.