மன்னார் – மதவாச்சி பிரதான வீதியில் உள்ள குஞ்சுக்குளம் பகுதியில் வைத்து 12 மில்லியன் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் சனிக்கிழமை இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்தோடு, அவர்கள் பயன்படுத்திய கார் ஒன்றையும் சிறீலங்கா காவற்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
மன்னார், தள்ளாடி இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, மன்னாரிலிருந்து சென்ற குறித்த காரை பின்தொடர்ந்து சென்ற புலனாய்வுப் பிரிவினர், குஞ்சுக்குளம் அருகில் உள்ள விகும்புர பகுதியில் காரை இடைமறித்து, சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது வாகனத்தினுள் நூதனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஸ் போதைப்பொருள் புலனாய்வுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அந்த போதைப்பொருள் 12 மில்லியன் ரூபா பெறுமதியானது என கூறப்படுகிறது.
இந்நிலையில், கல்பிட்டியை சேர்ந்த 38 வயதுடைய மற்றும் மன்னார், அடம்பனைச் சேர்ந்த 27 வயதுடைய இருவருமே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருள், வாகனம் மற்றும் கைதான சந்தேக நபர்களோடு கிடைக்கப்பெற்ற சான்றுப் பொருட்கள் அனைத்தும் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் சிறீலங்கா காவற்துறையினர் ஒப்படைக்கப்பட்டுள்ளது.