மன்னார் வைத்தியசாலையில் இடம்பெற்ற இளம் தாய் சிந்துஜாவின் மரணம் தொடர்பில் சுகாதார அமைச்சு விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும், அந்த விடயத்தில் ஏதாவது தவறுகள் நடந்திருந்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நடைபெற்ற மருத்துவ திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், மன்னார் வைத்தியசாலையில் இடம்பெற்ற மரியராஜ் சிந்துஜாவின் மரணம் தொடர்பில் முன்வைத்த விடயங்கள் குறித்து பதிலளிக்கையிலேயே சுகாதார அமைச்சர் இவ்வாறு கூறினார்.
அதன்போது அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இந்த விடயம் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பான விசாரணை அறிக்கையை இன்னும் பார்க்கவில்லை. குறித்த விடயத்தில் ஏதாவது தவறுகள் நடந்திருந்தால் அது தொடர்பில் நிச்சயமாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்போம்.
இதேவேளை நாட்டில் நோயாளர்களை பாதுகாப்பது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். அதற்காகவே சட்டமூலமொன்றையும் முன்வைத்துள்ளோம் என்றார்.