மன்னாரில் பல கோடி ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சா பொதிகள் மற்றும் மஞ்சள் கட்டி மூடைகளை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்தச்சம்பவம் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றதுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி, மன்னார்-வங்காலை கடற்கரையோரப் பகுதியில் பதுக்கி வைத்திருந்த நிலையில் 125 கிலோ, 800 கிராம் எடையுள்ள ஒருதொகுதி கேரள கஞ்சா பொதிகளை மன்னார் பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.
புலனாய்வுத் துறையினரின் இரகசிய தகவல்களுக்கு அமைவாக மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பந்துல வீரசிங்கவின் பணிப்புரையில் மன்னார் தலைமையகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.கிருஸாந்தன் தலைமையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது சந்தேகநபர்கள் எவரும் கைதுசெய்யப்படவில்லை என்பதுடன் கண்டெடுக்கப்பட்ட கேரளா கஞ்சா ஒரு கோடியே 25 இலட்சம் ரூபாய் பெறுமதியானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சட்ட விரோதமான முறையில் இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக தலைமன்னார் பகுதிக்கு கொண்டுவரப்பட்ட ஒரு தொகுதி மஞ்சள் கட்டி மூடைகளை நேற்று மாலை மன்னார் பொலிஸார் பறிமுதல் செய்ததுடன் ஒருவரைக் கைது செய்தனர்.
இந்த நடவடிக்கையில், மன்னார் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் ராஜபக்ஷ தலைமையிலான பொலிஸ் குழுவினர் ஈடுபட்டனர்.
இதன்போது, பருத்திப்பண்னை பகுதியில் உள்ள வீட்டின் சமையல் அறையில் பதுக்கி வைத்திருந்த 154 கிலோ, 500 கிராம் எடை கொண்ட மஞ்சள் கட்டி மூடைகள் கைப்பற்றப்பட்டதுடன், அங்கிருந்தும் 2,250 மில்லிகிராம் கேரளா கைப்பற்றப்பட்டது.
மேலும், கைப்பற்றப்பட்ட மஞ்சள் கட்டி மூடைகள் சுங்கத் திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்படவுள்ளதோடு, சந்தேகநபர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இதேவேளை வங்காலை நானாட்டான் பிரதான வீதி, நருவிலிக்குளம் ஆயுர்வேத வைத்தியசாலைக்குப் பின்பகுதியில், 33 கிலோ, 650 கிராம் கேரளா கஞ்சா பொதிகளுடன் இருவர் நேற்றிரவு வங்காலை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.
வங்காலை பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் பியல் தலைமையிலான பொலிஸ் குழுவினரே குறித்த கஞ்சா பொதிகளை கைப்பற்றியுள்ளதோடு, குறித்த கஞ்சா பொதிகள் 36 இலட்சம் ரூபாய் பெறுமதியானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.