மன்னார் – நானாட்டான் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும் பிரபல வர்த்தகர் ஒருவர் இலுப்பைகடவை சிறீலங்கா பொலிஸார் கைது செய்து மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், குறித்த நபரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த வருடம் மணல் அகழ்வு தொடர்பான முரண்பாடு ஒன்றில் ஆத்திமோட்டை விவசாய அமைப்பின் தலைவரும் தமிழரசு கட்சியின் பிரதேச சபை வேட்பாளருமான நபர் ஒருவரை தாக்கி காயப்படுத்திய நிலையில் குறித்த வழக்கு விசாரணை இடம்பெற்று வந்தது.
இவ் வழக்கில் நீண்ட நாட்களாக வாக்குமூலம் வழங்க குறித்த வர்த்தகரை இலுப்பை கடவை சிறீலங்கா பொலிஸார் அழைத்த நிலையில் நீண்ட நாட்கள் வாக்குமூலம் வழங்காத நிலையில் நீதிமன்றத்திலும் முன்னிலையாகமால் இருந்துள்ளார்.
இந் நிலையில் கடந்த மாதம் நீதிமன்றத்தில் குறித்த நபர் ஆஜராகிய நிலையில் வாக்குமூலத்தை உடனடியாக வழங்குமாறு நீதவானால் உத்தரவிடப்பட்டது.
இருப்பினும் வாக்குமூலம் வழங்க வருகை தந்தும் வாக்குமூலம் வழங்காது தப்பித்து சென்றதாக குறித்த நபருக்கு எதிராக பொலிஸார் வழக்கு தாக்கல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் சந்தேக நபரை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.