மன்னார் மனிதப் புதைகுழி மீண்டும் அகழ்வு செய்யும் போது, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அதனை நேரடியாக பார்வையிட்டு உண்மைகளை கண்டறிய அனுமதிக்க வேண்டுமென மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க செயலாளர் பி.ஷர்மிளா கோரிக்கை விடுத்துள்ளார்.
மன்னாரில் டைபெற்ற ஊடக சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “மன்னார் மாவட்டத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன் மன்னார் நுழைவாயிலில் சதொச கட்டடம் இருந்த இடத்தை தோண்டிய போது மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன.
“மன்னார் தீவுப் பகுதியில் 1990ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டு வரை எமது உறவுகள் காணாமல் ஆக்கப்பட்ட நிலையில், வீடுகளுக்கு வந்து இராணுவத்தினர் எமது உறவுகளை பிடித்துச் சென்றுள்ளனர்.
“இதனால் குறித்த பகுதியில் மீட்கப்பட்ட மனித எலும்புக் கூடுகள் எமது உறவுகள் உடையதாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து இருந்தோம்.
“ஆனால், எமக்காக வாதாட வந்த சட்டத்தரணிகளை மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் எமக்காக ஆஜராக கூடாது என்று தடுத்து நிறுத்தினார்கள். இதனால் இவ்வழக்கை வவுனியா மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தோம். அதனடிப்படையில், வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியனால் எமக்கு நல்லதொரு தீர்ப்பு வழங்கப்பட்டது.
“நாங்கள் கேட்டுக் கொள்வது எமக்கான உண்மை தன்மை மற்றும் நீதி என்பன எங்களுக்கு கிடைக்க வேண்டும். இந்த மனித எச்சங்கள் யாருடையது என்பதைத் தெரியப்படுத்த வேண்டும். அத்தோடு, அகழ்வு பணியின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளாகிய நாங்கள் அங்கு சென்று அதனை நேரடியாக பார்வையிட்டு கண்டறிவதற்கான சுதந்திரத்தை எங்களுக்குத் தர வேண்டும்.
“அத்துடன், எதிர்வரும் மாதத்தில் நடைபெற இருக்கின்ற ஜெனிவா கூட்டத்தொடரில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக உண்மை மற்றும் நம்பிக்கை தன்மையுடன் கூடிய சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். “ஏனெனில், இங்கே நீதிக்காகவும், காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்காகவும் போராடிய தாய், தந்தையர் 100க்கும் மேற்பட்டவர்கள் இறந்து விட்டார்கள்” என்றார்.