மன்னிப்பு என்ற வார்த்தை எந்த வகையிலும் தமிழருக்கு தீர்வாக அமைந்துவிடாது!

You are currently viewing மன்னிப்பு என்ற வார்த்தை எந்த வகையிலும் தமிழருக்கு தீர்வாக அமைந்துவிடாது!

தமிழர்களுக்கு எதிரான கறுப்பு ஜூலை படுகொலைகள் நடந்து 41 வருடங்களின் பின்னர் அமைச்சர் ஒருவரால் தற்போது சொல்லப்பட்ட மன்னிப்பு என்ற வார்த்தை எந்த வகையிலும் தமிழருக்கு தீர்வாக அமைந்துவிடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் 70களின் பிற்பகுதியில் 1980 களின் ஆரம்பத்தில் பல்வேறுபட்ட விடுதலை இயக்கங்கள் உருவாகியிருந்தன. அவ்வாறான இயக்கங்களின் வரலாற்றில் தமிழீழ இராணுவம் எனும் கட்டமைப்பை உருவாக்கி ஈழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடியாக இருந்த ஒருவரான தம்பாபிள்ளை மகேஸ்வரனை இந்த சபையில் நினைவில் கொள்கின்றேன்.

இவர் வசதிபடைத்த குடும்பத்தில் பிறந்திருந்தாலும் இந்த மண்ணில் தமிழருக்கு எதிரான கொடுமைகளை கண்டு தன்னை போராளியாக மாற்றிக்கொண்டிருந்தார். லண்டனில் பொறியியல்துறையில் கற்ற இவர், தனது கற்கையை துறந்து தன்னை ஈழ விடுதலை போராளியாக இணைத்துக்கொண்ட இவரின் மரணத்தை நாங்கள் ஆழ்மன அஞ்சலியுடன் பதிவு செய்கின்றேன்.

இதேவேளை 41 வருடங்களுக்கு முன்னர் கொழும்பில் நடந்த மிகப்பெரிய இனப்படுகொலையாக கறுப்பு ஜூலை உள்ளது. தமிழர்கள் மீது இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அப்போதைய ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜயவர்தனவின் ஆசீர்வாதத்துடன் சிங்கள இளைஞர்களும், சிங்கள காடையர்களும் இந்த கொலைகளில் ஈடுபட்டனர். வெலிக்கடை சிறைச்சாலையில் இரண்டு நாட்கள் தொடர்ந்து மனித பேரவலம் நடந்தது. அங்கு தம்பாபிள்ளையும் இருந்தார்.

நடந்த படுகொலைகளுக்கு மன்னிப்பு கோருவதாக ஓர் அமைச்சரால் இந்த சபையில் 41 ஆண்டுகளின் பின்னர் எழுந்தமானமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொழும்பில் ஐயாயிரம் தமிழர்களின் வர்த்தக நிலையங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. தமிழர்கள் கொல்லப்பட்டனர். அவர்களின் கோடிக்கணக்கான பெறுமதியான சொத்துக்களும் அழிக்கப்பட்டுள்ளன. சர்வதேச குற்றங்களை விசாரணை செய்யும் அமைப்புகளும் இதனை இனப்படுகொலை, மனித படுகொலையாக கூறின. இதனால் மிகப்பெரிய கொலைகள் நடந்த மாதமாக இருக்கின்றது.

ஏன் தமிழர்கள் ஆயுதம் ஏந்தினர் என்று பலரும் கேட்கின்றனர். ஆனால் 1983ஆம் ஆண்டில் தமிழர்கள் மீது இவ்வாறான தாக்குதல்கள் நடத்தப்பட்ட போது, அரச படைகள் பார்த்துக்கொண்டிருந்தாலும் எவரும் தடுக்கவில்லை. ஏதும் அறியாத மலையக தமிழர்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. 1954இல் இருந்து இதுபோன்ற திட்டமிட்ட தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. தொடர்ந்தும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு நடைபெறுகின்றது. 1983இல் நடந்தவற்றுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை என்றார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply