சீனாவைச் சேர்ந்த ஹீஜியாங்குவி என்ற விஞ்ஞானி, கடந்த ஆண்டு ஹாங்காங்கில் நடைபெற்ற மருத்துவ மாநாட்டில், உலகின் முதல் மரபணு மாற்றம் செய்யப்பட்ட இரட்டை பெண் குழந்தைகளை தான் உருவாக்கி இருப்பதாக கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
இந்நிலையில் அண்மையில் இவ்வாறு மரபணு மாற்றம் செய்யப்பட்ட மேலும் ஒரு குழந்தையை இவர் உருவாக்கியிருப்பதாக சீன ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின.
இதனைத் தொடர்ந்து தடை செய்யப்பட்ட மருத்துவ நடைமுறைகளை மேற்கொண்டதாக கூறி ஹீஜியாங்குவி மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தற்போது இவருக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிறக்கப்போகும் குழந்தைகளில் ஜீன்களில் மாற்றம் செய்வதன் மூலம் பெற்றோரிடம் இருந்து குழந்தைக்கு கடத்தப்படும் நோய்களை தடுக்க முடியும் என்று கூறப்படுகிறது. இந்த ஆராய்ச்சி வெற்றி பெற்றால் பிறக்கப்போகும் குழந்தையின் அறிவாற்றல் முதல் கண் கருவிழியின் நிறம் வரை நமக்கேற்றவாறு மாறுதல் செய்ய முடியும்.
ஆனால் உலக அளவில் இந்த ஆராய்ச்சிக்கு பல நாடுகள் தடை விதித்துள்ளன. இந்நிலையில் ஹீஜியாங்குவி சட்டவிரோதமாக இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இதற்காக இவர் எச்.ஐ.வி நோய் தொற்று உள்ள பெற்றோருக்கு பிறக்கப்போகும் குழந்தையின் ஜீன்களில் மாற்றம் செய்ய முயற்சி செய்துள்ளார்.
அந்த ஆராய்ச்சியில் தான் வெற்றி பெற்றுவிட்டதாக மருத்துவ மாநாட்டில் அவர் கூறியுள்ளார். இருப்பினும் அவரது ஆராய்ச்சி உண்மையில் வெற்றி அடைந்ததா? அப்படியென்றால் அவர் உருவாக்கிய குழந்தை எங்கே? உள்ளிட்ட தகவல்கள் அதிகாரப்பூரவமாக வெளியிடப்படவில்லை.