ரஷ்யாவில் வெற்றி தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், அதற்குள் உக்ரைனின் மரியுபோல் நகரை கைப்பற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இறுதி மூச்சு உள்ளவரையில் மரியுபோல் நகரை பாதுகாப்போம் என உக்ரைன் துருப்புகள் சூளுரைத்துள்ளன. ரஷ்யாவில் வெற்றி தின கொண்டாட்டங்கள் மே 9ம் திகதி முன்னெடுக்கப்படுகிறது. பல நாட்களாக ஒத்திகையும் பார்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோலை கைப்பற்றுவதில் ரஷ்ய துருப்புகள் முனைப்பு காட்டி வருகின்றனர்.
கடந்த 2014ல், உக்ரைனுக்கு சொந்தமான கிரீமியா பகுதியை ரஷ்யா தனது வசமாக்கியது. தற்போது அதற்கான வழித்தடத்தை அமைக்க, ரஷ்யாவுக்கு மரியுபோல் நகரம் தேவைப்படுகிறது.
இதனால், மரியுபோல் நகரம் மீது ரஷ்யாவின் முழு கவனமும் திரும்பி உள்ளது. மரியுபோலில், அஜோவ்ஸ்டால் உருக்காலை அமைந்துள்ள பகுதி மட்டும் உக்ரைன் ராணுவம் வசம் உள்ளது. இதனிடையே, குறித்த ஆலையில் சிக்கியிருந்த பொதுமக்களில் பெரும்பாலானோர் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்ய துருப்புகளால் குறித்த ஆலை வளாகம் மொத்தமாக கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், அந்த ஆலையின் பதுங்கும் அறையில் உக்ரைன் இராணுவத்தினர் சிக்கிக்கொண்டுள்ளனர்.
காயமடைந்த பல வீரர்கள், போதிய மருந்து மற்றும் தேவைக்கு உணவு, தண்ணீர் இல்லாமல் தத்தளித்து வருகின்றனர். இதை வாய்ப்பாக பயன்படுத்தி குறித்த ஆலையை கைப்பற்றி, மொத்த மரியுபோல் நகரை தங்கள் வசம் கொண்டுவர ரஷ்யா திட்டமிட்டுள்ளது.
இதனிடையே, ரஷ்யாவில் மே 9ம் திகதி வெற்றி தின விழா கொண்டாட்டம் நடைபெற உள்ளது. இரண்டாம் உலகப் போரில் சோவியத் ஒன்றியத்திடம் ஜேர்மனியின் நாஜிப் படைகள் சரணடைந்த நாள், ஆண்டுதோறும் வெற்றி தின விழாவாக கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில், வெற்றி தின விழா கொண்டாட்டத்திற்குள் மரியுபோலை கைப்பற்ற ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இலக்கு நிர்ணயித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், சரணடையும் பேச்சுக்கே இடமில்லை எனவும், இறுதி மூச்சுவரையில் மரியுபோல் நகரை காக்க போராடுவோம் என உக்ரைன் துருப்புகள் சூளுரைத்துள்ளனர். மட்டுமின்றி, உலக நாடுகள் தங்கள் கோரிக்கையை ஏற்று, உரிய உதவிகள் அளிக்கவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதேவேளை
உக்ரைனில் பொதுமக்கள் பதுங்கியிருந்த பாடசாலை ஒன்றில் ரஷ்ய துருப்புகள் வெடிகுண்டு வீசிய சம்பவத்தில் குறைந்தபட்சம் 60 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கிழக்கு உக்ரைனில் உள்ள Bilohorivka பகுதி பள்ளி ஒன்றில் ரஷ்ய துருப்புகள் முன்னெடுத்த வெடிகுண்டு தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியானது.