யாழ்ப்பாணத்தில் பரீட்சை நிலையம் ஒன்றின்றினுள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று மாணவர்கள் சிலர் மீது தாக்குதல் நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர்.
வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை இடம்பெற்று வருகின்றது. குறித்த பரீட்சை நிலையத்தில் , அப்பகுதியை சேர்ந்த இரண்டு பாடசாலை மாணவர்களும் பரீட்சை எழுதி வருகின்றனர்.
அந்நிலையில் நேற்றைய தினம் புதன்கிழமை பரீட்சை ஆரம்பமாக இருந்த வேளை இரு பாடசாலைகளின் மாணவர்கள் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
அதனை பரீட்சை நிலைய கண்காணிப்பாளர்களான ஆசிரியர்கள் , தடுத்து நிறுத்தி , மாணவர்களை கடுமையாக எச்சரித்து , பரீட்சை மண்டபத்தினுள் அனுப்பி பரீட்சை எழுத வைத்தனர்.
பின்னர் முதலாம் பகுதி வினாத்தாள் நேரம் முடிவடைந்து , மாணவர்களிடம் விடைத்தாள்களை பெற்ற பின்னர் இரண்டாம் பகுதி வினாத்தாள் வழங்குவதற்காக சிறு நேர இடைவேளை வழங்கப்பட்டது.
அதன் போது, பரீட்சை நிலையத்தினுள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று ஒரு தரப்பு மாணவர்கள் மீது தாக்குதல் நடாத்தியுள்ளது. அதனை அடுத்து மருதங்கேணி சிறீலங்கா காவற்துறையினருக்கு , அறிவிக்கப்பட்டதை அடுத்து , சிறீலங்கா காவற்துறையினர் சம்பவ இடத்திற்கு வருகை தர முன்னர் , வன்முறை கும்பல் சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளது.
அதனை அடுத்து பரீட்சை நிலைய மேற்பார்வையாளரால் மருதங்கேணி சிறீலங்கா காவற்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து சிறீலங்கா காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதேவேளை பரீட்சை முடிவடையும் வரையில் , குறித்த பரீட்சை நிலையத்திற்கு சிறீலங்கா காவற்துறை பாதுகாப்பு வழங்க மருதங்கேணி சிறீலங்கா காவற்துறை நிலைய பொறுப்பதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.