காசாவில் உள்ள மருத்துவமனைக்கு அருகில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதால் நூற்றுக்கணக்கான நோயாளிகள் மருத்துவமனையில் சிக்கித் தவிப்பதாக ஐ.நா பிரதிநிதி தெரிவித்துள்ளார். இஸ்ரேல்-ஹமாஸ் படையினர் இடையே தாக்குதலானது 24வது நாளாக தொடர்ந்து வருகிறது.
பாலஸ்தீனத்தின் காசா பகுதி மீது இஸ்ரேல் வான் மற்றும் தரைவழி தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் காசாவின் வடக்கு பகுதியில் உள்ள மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான நோயாளிகள் தாக்குதலுக்கு மத்தியில் சிக்கித் தவிப்பதாக பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய ராணுவம் காசாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள அல்-குத்ஸ் மருத்துவமனைக்கு அருகில் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.
அத்துடன் பொதுமக்கள் உடனடியாக அல்-குத்ஸ் மருத்துவமனையை விட்டு வெளியேறுமாறு மருத்துவமனை பணியாளர்களிடம் அவர்கள் எச்சரித்ததாகவும் அந்த மருத்துவமனை மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஆனால் நோயாளிகள் பலர் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதால், அவர்களை வெளியேற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டு இருப்பதாக மருத்துவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
போர் தாக்குதல் காரணமாக கிட்டத்தட்ட 14,000 மக்கள் மருத்துவமனை மற்றும் அதன் மைதானங்களில் தஞ்சம் அடைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில் பாலஸ்தீன பிரதமர் முஹம்மது ஷ்டய்யே ,தங்கள் மக்கள் மீதான போரை உடனடியாக நிறுத்துங்கள் என கோரிக்கை விடுத்துள்ளார்.