ஒஸ்லோ பல்கலைக்கழக வைத்தியசாலையில் பணிபுரியும் சுகாதார சேவையாளர்களுக்கான பணிநேரம் 12 மணிநேரங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பணியாளர்கள் பற்றாக்குறை வழமையானதெனினும், பற்றாக்குறை ஏற்படும் சமயங்களில் சுவீடன், டென்மார்க் போன்ற நாடுகளிலிருந்து தருவிக்கப்படும் தற்காலிக பணியாளர்களை வைத்து வைத்தியசாலை நடவடிக்கைகள் தடங்கலில்லாமல் நடைபெறுவது வழமையானது எனவும் தெரிவிக்கும் வைத்தியசாலை நிர்வாகம், எனினும் தற்போதைய நிலைமையில் சுவீடன், டென்மார்க் நாடுகளும் “கொரோனா” பரவலால் பாதிக்கப்பட்டுள்ளதால் அந்தந்த நாடுகளிலும் சுகாதார சேவையாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், அங்கிருந்தும் பணியாட்களை நோர்வேக்கு வரவழைக்க முடியாத நிலை தோன்றியுள்ளதாக கவலை தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஒஸ்லோ பல்கலைக்கழக வைத்தியசாலையில் மட்டும் 1801 பணியாளர்கள் தனிமையில் வைக்கப்பட்டும், 14 பணியாளர்கள் “கொரோனா” தொற்றுதலினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீதமிருக்கும் பணியாளர்களின் பணிநேரத்தை நாளொன்றுக்கு 12 மணிநேரமாக அதிகரிப்பதை விட வேறு மார்க்கமேதும் இல்லையெனவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.