சீனாவின் உகான் நகர பிரபலமான விலங்குகள் சந்தையிலிருந்து உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பரவியது என்று சீனா கூறிவருகிறது. ஆனால், கொரோனா வைரஸ் வுஹான் ஆய்வகங்களில் செயற்கையாக உருவாக்கப்பட்டது, கொரோனா பரவலை கையாண்ட விதத்தில் சீனா வெளிப்படைத்தன்மையுடன் நடக்கவில்லை, உலக நாடுகளுக்கும், அமெரிக்காவுக்கும் ஏற்பட்ட உயிரிழப்பு, பொருளாதார இழப்புக்கு சீனாதான் பொறுப்பேற்க வேண்டும். ஆதலால், சீனாவிடம் இருந்து இழப்பீடு பெறுவற்காக சட்ட நடவடிக்கை எடுப்போம் என அமெரிக்கா கூறி வருகிறது.
இந்நிலையில் சீன நாடாளுமன்றத்தின் செய்தித்தொடர்பாளர் ஹாங் யேசூயி (Yee Sui Hong) நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உலகில் கொரோனா வைரஸ் பரவியதற்கு சீனாதான் காரணம் என்பதை நாங்கள் ஏற்க முடியாது. இது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு. இதற்காக அமெரிக்கா எங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க திட்டமி்ட்டிருப்பதையும் ஏற்க முடியாது. இது சர்வதேச உறவுகளின் விதிமுறைகளை மீறி சர்வதேச சட்டங்களை மீறி நடப்பதாகும்.
அமெரிக்கா ஏதேனும் சட்டநடவடிக்கை எடுத்தாலோ அல்லது மசோதா கொண்டு வந்தாலோ அதை சீனா கடுமையாக எதிர்க்கும். அவ்வாறு அமெரிக்கா ஏதேனும் செய்தால் அதற்கு சீனா தரப்பில் கடும் பதிலடி நடவடிக்கைகள் இருக்கும்.
அமெரிக்கா முதலில் மற்ற நாடுகள் மீது குற்றம்சாட்டுவதை நிறுத்த வேண்டும், தன்னுடைய நாட்டில் நிலவும் சொந்த பிரச்சினைகள் மீது கவனம் செலுத்த வேண்டும்,சொந்த பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசைதிருப்பும் அமெரிக்காவின் செயல் பொறுப்பானது அல்ல.
அமெரிக்காவின் சட்ட நடவடிக்கையையும் ஏற்க மாட்டோம், இழப்பீடு கோருவதையும் ஏற்க முடியாது.கொரோனா பரவலை பொறுத்தவரை சீனா சிறப்பாகச் செயல்பட்டு வைரஸைக் கட்டுப்படுத்தியது. ஏராளமான தியாகங்களைச் செய்து கொரோனா போரில் சீனா வென்றுள்ளது.
சீனாவில் கொரோனா தொற்று ஏற்பட்டதிலிருந்து உலகிற்கு வெளிப்படைத்தன்மையுடனே அனைத்து தகவல்களைும் சீனா தெரிவித்துவந்தது.
உலக சுகாதார அமைப்புக்கும் அனைத்து தகவல்களையும் கூறி உள்ளோம், உலக நாடுகளுக்கும் சரியான நேரத்தில் எச்சரிக்கை செய்தோம். கொரோனா வைரஸ் சீனாவின் ஆய்வகங்களில் இருந்து பரவியது எனும் குற்றச்சாட்டை ஏற்க முடியாது. இது முழுமையாக அறிவியல் சார்ந்த விஷயம். அறிவியல் அறிஞர்கள், ஆய்வாளர்கள், மருத்துவ வல்லுநர்கள் ஆய்வு செய்து அவர்கள் முடிவு செய்யட்டும் என அவர் தெரிவித்துள்ளார்.